யாழின்மொழி யெழின்முறுவ லிருகுழைமேற் கடைபிறழும் மாழைவிழி வனமுலையார் மணியல்குற் றுறைபடிந்து வீழுமவர்க் கிடைதோன்றி மிகுபுலவிப் புணர்ச்சிக்கண் ஊழியா மொருகணந்தா னவ்வூழி யொருகணமாம். | 268 | (இ-ள்.) யாழின்...துறை படிந்து - யாழினுமினிய மொழியினையும், அழகிய பல்வரிசையினையும், இரு காதுகளிலுமணிந்த மகரக் குழைகளின் மேலே கடைப்பார்வை பிறழ்ந்து செல்லும் மாவடுவைப் போன்ற கண்களையும், சந்தனக்கோலமெழுதிய தனங்களையும் உடைய, சங்கிலியாரது அழகிய அல்குலாகிய தடத்தின் துறையிலே ஒழுகி; வீழும் அவர்க்கு - அழுந்துகின்ற நம்பிகள் சங்கிலியார் என்ற இருவர்க்கும்; இடைதோன்றி மிகு புலவிப் புணர்ச்சிக்கண் - இடையே உண்டாகி மிகுகின்ற புலவியிலும் புணர்ச்சியிலும் (முறையே); ஊழியாம்....கணமாம் - ஒரு கணம் ஓரூழியாக நீட்டிக்கும்; அவ்வோரூழி ஒரு கணமாகச் சுருங்கும். (வி-ரை.) மொழி - முதலியவை முன்பாட்டிற் "கண்டு கேட்டு" என்று குறித்த வெவ்வேறு அனுபவங்களுக்கிடமாகிய தானங்களைக் குறித்தன; மொழி - முறுவல் - விழி முலை முதலியனவற்றை உடையார் என்க. யாழின் மொழி யாழ் - யாழொலியினைக் குறித்தது; ஆகு பெயர்; இன் - ஐந்தனுருபு. "முரன்றயா ழொலியினதாய்" (1363); யாழ்ஒலியி னினிய மொழி என்க; "குழலினிது யாழினி தென்பதம் மக்கண், மழலைச்சொற் கேளா தவர்" என்ற விடத்து யாழொலி மொழிக்கு உவமிக்கப் பட்டது காண்க. முறுவல் - பல் வரிசை; முறுவல் - நகை; நகைக்கு கருவியாகிய பல்வரிசைக்கு வந்தது. குழைமேல் - காதுகளிலணிந்த குழைகளின்மேல் கடைவிழி பிறழும்படி கண்கள் நீண்டிருத்தல் பெண்களின் உத்தம இயல். கடை - கடைக்கண்; கடைக்கண் பார்வை என்ற பொருளில் வந்தது. மாழை விழி - மாழை - மாவடு; மெய்பற்றி வந்த உவமை. அல்குல் துறைபடிந்து - அல்குல் - கடிதடம்; துறை - படிந்து என்றதற்கேற்பத் தடமாகவைத்து துறை என்றார்; படிதல் - தோய்தல்; துறையின் அமர்ந்தவாறே மூழ்குதல். வீழும் அழுந்தும்; வீழ்தல் - விரும்புதலுமாம். அவர்க்கு இடைதோன்றிமிகும் - இடை - ஏழனுருபு. அவர் - நம்பிகள் சங்கலியார் என்றிருவர். புலவிப் புணர்ச்சிக்கண் - புலவியும் புணர்ச்சியுமாகிய இரண்டு நிலைகளினும், புலவிக்கண் - ஒரு கணம் ஊழியாம்; புணர்ச்சிக்கண் - அவ்வூழி ஒரு கணமாம் என்று முறை நிரனிறையாகப் பொருள் கொள்க. ஊழி மிகநீடித்த காலக்கூறு; கணம் - மிகக் குறுகிய காலக்கூறு. புலவி - "அஃதாவது இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக்கருதிய வழி ஒருவரோடொருவர் புலத்தல்" என்பர் பரிமேலழகர். உண்மையாகிய வேறு ஒரு காரணமின்றித் தாமே ஒரு காரணங் கற்பித்துக் கொண்டு ஊடுதல். படிந்து வீழுமவர்க்கிடை தோன்றி மிகு - இருவருள் ஒருவரிடை உளதாகி மற்றவரிடைச் சேறலால் இடை என்றும், காரணமின்றி வருவிக்க நிகழ்வதனால் தோன்றி என்றும், அவ்வாறு தோன்றிய தன்மை மிக்கவழி பயன்றருதலால் மிகு என்றும் கூறினார். படிந்து வீழுமவர் என்றதனால் முன்னர்ப் புணர்ச்சியும், மிகு புலவிப் புணர்ச்சிகண் - என்றலால் அதன் பின்னர்ப் புலவியும், அதன் பின்னர் அது தீர்ந்து புணர்ச்சியும் கூறியவாறு; அவ்வூழி என்ற முன்னறிசுட்டும் வைப்பு முறையும் இக்கருத்தன. இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அகப்பொருணூல்களிற் பேசப்படும் உண்மை; "துனியும் புலவியு மில்லாயிற் காமங், கனியுங் கருக்காயு மற்று", "ஊடுதல் காமத்திற்கின்ப மதற்கின்பங், கூடி முயங்கப்பெறின்" என்பவை காண்க; இன்னு மிவற்றின் இயல்பெல்லாம் அகப்பொருள்நூல்களினும் திருக்குறளினுள் புணர்ச்சி விதும்பல், புலவி, புலவி நுணுக்கம் முதலிய பகுதிகளிலும் கண்டுகொள்க. புலவிக்கண் ஊழியாம் ஒருகணந்தான் - என்றது புலவி நிற்கும் காலம் ஒரு கணமேயாயினும் அது ஊழியேபோல நீடித்தது என்பது; தானும் என்ற சிறப்பும்மையும் ஊழியே என்ற தேற்றேகாரமும் விகாரத்தாற்றொக்கன. ஆம் ஆக்கச் சொல் உவமை குறித்தது. புணர்ச்சிக்கண் அவ்வூழி ஒருகணமாம் - புணர்ச்சி நிகழும் காலம் நீண்டதாயினும் ஒரு கணமேபோல விரைந்து கழியும் என்பது; உலக இன்பங்கள் விரும்பிய வழி நிகழ்ந்தபோது காலம் விரைந்து செல்லக் காண்டலும், விரும்பாத நிகழ்ச்சிகள் நேர்ந்தபோது காலம் மெல்லச் செல்வதுபோல் காண்டலும் கண்கூடு; பேரின்பத்தினும் மிவ்வாறே கண்டுகொள்க. உம்மையு ஏகாரமும் முன்கூறியவாறே தொக்கன. அவ்வூழி - புலவியில் ஒரு கணம் ஊழியாகக் கண்ட அந்த என அகரம் முன்னறிசுட்டு. இதனால் புலவியின்பின் புணர்ச்சி நிகழ்ந்ததனைக் குறிப்பிற் கூறியவாறு. இவையெல்லாம் பெருங் காவிய மாதலின் தமிழ்அகப்பொருணலம் பற்றிக் கூறிய அளவாம். ஈண்டுச் சங்கிலியாருடன் கூடி யின்ப நிகழ்ந்தவை முன்பாட்டினாலும், அவ்வின்பம் பெருக நிகழ்ந்தமை இப்பாட்டினாலும் கூறினார்; இவ்வாறே பரவையாருடன் கூடிய நிலையினும் (327 - 329) இரண்டு பாட்டுக்களாற் கூறிய நிறையும் நியமமும் கவிநயமும் கண்டுகொள்க. இனி, இவ் வின்பம் ஏனை உலகர் போன்று இழிந்த காமத்திற் சென்றொழிந்து மேல் வினைகள் பெருக ஏதுவாகக் கழியாது இறைவரது சிவயோகமாகிய பேரின்பத்துள்ளடங்கி உடலூழாய்க் கழிந்த நிலையினை மேல்வரும்பாட்டில் "இந் நிலையிற் பேரின்ப மினிதமர்வர்" (3423) என்று தொடங்கிக் கூறும் திறனும், இது போலவே முன்னர்ப் பரவையார் கூட்டத்தின் நிகழ்ச்சியினைத் "தன்னையா ளுடைய பிரான் சரணார விந்தமலர், சென்னியிலுஞ் சிந்தையினு மலர்வித்து" (328) என்று கூறிய திறனும் கண்டுகொள்க. நம்பிகள்பால் அறியாமையாற் பலசொல்லி அபசாரப்படும் மாக்கள் இந்நுட்பங்களைக் கண்டு உய்தி பெறுவாராக. |
|
|