பாடல் எண் :3424

பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சார லிடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூ ரணிவீதி யழகரவர்

மங்கலநாள் வசந்தமெதிர் கொண்டருளும் வகைநினைந்தார்.
270

(இ-ள்.) பொங்குதமிழ்...தென்றல் - மேன்மேலும் பொங்கி வளர்கின்ற தமிழ்க்கிருப்பிடமாகிய பொதியமலையினிற் றோன்றி, பூஞ்சந்தன மரங்களின் மணத்தில் அளவளாவி குளிர்ந்த நீர்ச் சாரலின்கண் வளர்ந்த செழுமையுடைய தென்றற்காற்று; அங்கணைய - அங்குத் திருவொற்றியூரில் வந்துசார; திருவாரூர்...நினைந்தார் - திருவாரூரில் அழகிய வீதிவிடங்கப் பெருமான் மங்கலமாகிய திருவிழா நாட்களில் வசந்தவிழாத் திருவோலக்கத்தினைக் கொண்டருளும் தன்மையினை நினைந்தனர் (நம்பிகள்).
(வி-ரை.) பொங்குதமிழ் - வழக்காறற்றொழிதலும், வளர்ச்சியின்றி நிற்றலும், இலக்கண வரம்பின்றி நிகழ்தலும் முதலிய தடைகள் இல்லாமல் மேன்மேல் வளம்பெற்று வளரும் தமிழ் என்றதாம். ஏனைய மொழிகள் எல்லாவற்றினும் தமிழின் மேம்பாடு குறித்தது. "ஞால மளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" (970) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
தமிழ்ப்பொதியமலை - தமிழுக்கிருப்பிடமாகிய தமிழ்முனிவர் அகத்தியனார் வீற்றிருக்கும் பொதிகைமலை; தமிழ்முனிவரது மலை என்க. தமிழ் - இனிமை என்று கொண்டு கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பம் தரும் பொதியமலை என்றலுமாம்.
பொதியமலைப் பிறந்து பூஞ் சந்தனத்தின் கொங்கணைந்து - "சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவன்" என்பன முதலியவை காண்க. அணைந்து விரவி; கொங்கு - மணம்; பிறந்து - பொதியமலையின் குளிர்ந்த சாரலினின்று தோன்றி; பிறத்தல் - தோன்றுதல் - தொடங்குதல். பிறந்த தெங்கள் பிரான் மலயத்திடை, சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்" (313) என்று முன்னர்ப் பரவையார் திறத்து நிகழ்ந்த கருத்துக்களை இங்குவைத்து ஒப்புமை கண்டு கொள்க. பிறந்து - கொங்கணைந்து என்றதனால் தண்மையும் மென்மையும் நறுமையுமுடைமை குறிக்கப்பட்டன. பூ -அழகு; மணமுமாம்.
குளிர் சாரலிடை வளர்ந்த - குளிர்சாரல் என்றது பொதியமலையே யன்றி ஏனைய குளிர்மிக்க மலைச் சாரல்களும், நீர்வளமிக்க சோலைப்பகுதிகளும், காவிரி நீர் நாட்டுப் பகுதிகளும் குறித்தது; சாரல் - சார்ந்து வரும் இடங்கள்; வளர்ந்த - பிறந்த தன்மைக்கு மாறுபாடின்றி ஏற்றவாறே வளர்ச்சியும் பெற்று என்றது குறிப்பு. கொழுமை - மாந்திய முதலிய வளங்களை உடைமை.
அங்கு அணைய - அங்குத் தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் அத்தென்றல் வந்து சார; அணைய - நினைந்தார் - என்று கூட்டுக; இவ்வாறன்றி அங்கு - திருவாரூரில் என்று கொண்டு, அங்குத் தென்றல் அணைய அக்காலத்தில் வசந்தம் கொண்டருளும் வகை என்றுரைப்பாருமுளர்.
திருவாரூர் அணிவீதி அழகர் - வீதி விடங்கப் பெருமான்; தியாகேசர்.
மங்கலநாள் வசந்தம் எதிர்கொண்டருளும் - மங்கலநாள் திருவிழா, வசந்தம் அத்திருவிழாவில் ஆறாவது திருநாள் என்பர்.
அங்கணைய - வகை நினைந்தார் - தென்றல் - பருவத்தையும் நீர் நாட்டையும் திருவாரூரினையும் நினைவூட்ட, அப்பருவம் திருவாரூரில் தியாகேசர் வசந்தங் கொண்டருளுவதை நினைவூட்ட இத்துணையும் நினைந்தனர்.
எதிர் கொண்டருளும் வகை - ஏற்றருளும் விழாச் சிறப்பு. இவ்வாறு உலகானுபவப் பொருள்கள் இறைவரது தொடர்பு பற்றி நினைவூட்டும் நிலை பெரியோர்களது செம்மை சேர் மனநிலை; இத்தன்மையில் உலகின்பப் பொருள்களை இறைவர் பற்றாகக் காணும் தன்மை பெறப் பழகுதலே சிவயோகத்தின் பண்பு; இப்பயிற்சி மிக்க நலம் தருவதொன்றாம்.