பூங்கோயி லமர்ந்தாரைப் புற்றிடங்கொண் டிருந்தாரை நீங்காத காதலினா னினைந்தாரை நினைவாரைப் பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயனுணர்வார் "ஈங்குநான் மறந்தே"னென் றேசறவான் மிகவழிவார், | 272 | (இ-ள்.) பூங்கோயில்....நினைவாரை - பூங்கோயிலினுள்விரும்பி வீற்றிருப்பவரைப், புற்றினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவரை, இடையறாத பெருவிருப்பத்தினாலே தம்மை நினைந்திருக்கும் அடியவர்களைத் தாம் நினைந்திருப்பவரை; பாங்காக...பயனுணர்வார் - முறைமையாகத் தாம் முன்னாட்களிற் பணிய அதனால் வரும் சிவானந்தமாகிய பெரும்பயனை உணர்ச்சியிற் கொள்பவராகி; ஈங்கு நான்...மிக அழிவார் - இவ்விடத்து நான் மறந்திருந்தேன் என்று வருந்தி மிகவும் மனமழிவாராகி. (வி-ரை.) பூங்கோயில்...நினைவாரை - ஈண்டுக் கூறியவை மூன்றும் புற்றிடங்கொண்ட பிரானாராகிய திருமூலட்டான நாதரை நினைந்த வகை; மேற்பாட்டிற் கூறும் (3427) மூன்றும் வீதிவிடங்கராகிய தியாகேசரை நினைந்தவகை. மேற்பாட்டில் (3427) வரும் மூன்றும் ஒருமையாற் கூறியது தோழமையால் தம்முடன் ஒன்றித்து நிகழும் தன்மையுடையார் என்ற குறிப்புமாம். பதிகத்துள் "இறைவனையே" என்று ஒருமையாற் போற்றியதும், "துரிசுகளுக்கு உடனாகி" என்றதும், பிறவும் கருதுக. நீங்காத...நினைவாரை - எல்லாவுயிர்களையும் பொதுவகையால் நினைந்தருள் பவராயினும் இடையறாக் காதலினா னினைவாரைச் சிறப்பு வகையால் நினைவார் இறைவர் என்பதாம். "சார்ந்தாரைக் காத்த றலைவர் கடனாதல், சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் - சார்ந்தடியார், தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல், ஆய்ந்தார்முன் செய்வினையு மாங்கு" (போதம் - 10) என்று இவ்வுண்மையினை ஞானசாத்திரம் விளக்குதல் காண்க. "மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை யஞ்செலுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ், சிறந்தானை" (தாண் - திருநாகேச்சுரம் - 6), "எத்தனையும் பத்தர்பத்திக் குளைவானை யல்லாதார்க் குளையாதானை" (தாண் - கீழ்வேளூர் 3) "மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை" (தாண். திருமுதுகுன்றம் - 8) என்பன முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. நினைந்தாரை நினைவாரை - நினைந்தபின்னர் அவர் நினைந்தவற்றை யீய நினைவார் என்றபடி. பாங்காக - ஆளாகும் முறைமையாலே; பாங்கு - பண்பு; பாங்கு - தோழமை என்ற குறிப்புமாம். "என்னுடைய தோழனுமாய்" என்ற பதிகம் பார்க்க. பணிய வரும் பயன் உணர்வார் - பயன் - பணிந்தமையால் பெற்ற பெரும்பேறாகிய பேரருளின் றிறங்கள். சரித நிகழ்ச்சிகள் எல்லாம் காண்க. முன்பு - முன்னைநிலையினும், அதனைத்தொடர்ந்த இந்நிலையினும் இதற்கு முன்னாக. உணர்வார் - உணர்வாராகி; முற்றெச்சம்; உணர்வார் - மனம் அழிவார் - மிக நினைந்து - இயம்பி - இரங்கினார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உணர்வாராகி அதனாலே அழிவார் - நினைந்து என்க. ஈங்கு நான் மறந்தேன் என்று - பயனை உணர்ந்தமையால் இங்குஅவரை நான் மறந்திருந்தேன் என்று வருந்தினார்; ஈண்டு மறந்தேன் என்பது பிரிந்திருந்தேன் என்ற அளவில் பொருளடைந்து நின்றது; நம்பிகள் எந்நாளும் திருவாரூரை மறந்திருக்கவில்லை யாதலின்; "பிரிந்திருக்கேன்" என்ற தேவாரமும் பார்க்க. ஏசறவு - பெறற்கரிய பொருளைப் பிரிந்திருந்தமையின் வரும்வருத்தம்; திருவாசகத்தினுள் "திருவேசறவு" என்ற பகுதியின் திருப்பாட்டுக்கள் பார்க்க. மிக அழிதல் - மனமிக அழிதல் - நைந்து படுதல். |
|
|