மின்னொளிர்செஞ் சடையானை வேதமுத லானானை மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிகநினைந்து பன்னியசொற் "பத்திமையு மடிமையையுங் கைவிடுவான்" என்னுமிசைத் திருப்பதிக மெடுத்தியம்பி யிரங்கினார். | 273 | (இ-ள்.) மின் ஒளிர்....மகிழ்ந்தானை - மின்போல ஒளிவிடும் சிவந்த சடையினை உடையவரை, வேதங்களின் முதல்வராக உள்ளவரை, நிலைபெற்ற புகழை உடைய திருவாரூரினை மகிழ்ந்தவரை; மிகநினைந்து - (பிரிவாற்றாமையால்) மிகவும் நினைந்து; பன்னிய சொல்....இரங்கினார் - பலமுறையும் அடுக்கிய சொற்களையுடைய "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்" என்று தொடங்கும் சொல்லும் பொருளுமுடைய பண் பழம்பஞ்சுரத்தின் இசைபொருந்திய திருப்பதிகத்தினை எடுத்துப் பாடி இரங்கினார். இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை.) மிக நினைந்து - பலபடியாலும் அழுந்த நினைந்து. மிக நினைந்து பன்னிய சொல் - பன்னுதல் - ஒரே பொருளைப் பல திறத்தாலும் அனுபவித்துச் சொல்லுதல்; "எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" "எவ்வணநான் பிரிந்திருக்கேன்" "எங்ஙனநான் பிரிந்திருக்கேன்" "எப்பரிசு" "என்னாக" "என்செய" "எற்றுளனாய்" என்பனவாகப் பாட்டுத் தோறும் பன்னிவரும் முடிபுகளையும், அவற்றாற் றெரியவரும் மனமழிந்த நிலையினையும் காண்க; இப்பதிகம் நம்பிகளது பதிகங்களில் வழக்கமாக வரும் பத்துப்பாட்டுக்களின் மேலும் இரண்டு பாட்டுக்கள் கொண்டு விளங்குதலும், தேவிமார் இருவர் காரணமாக வந்த வினைநிகழ்ச்சிகளின் நினைவுகொண்டு விளங்குதலும் காண்க. "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பும், பதிகக் கருத்துமாம்; பத்திமை - அகநிலை; அடிமை - புறநிலை; கைவிடுவான் - நழுவ விடுவானாகி. இசை - பதிகப்பண்ணாகிய பழம்பஞ்சுரப் பண்ணிசை. இரங்கினார் - இரங்குதல் - மனமகிழ்ந்து தந்நிலைக்குத்தாமே வருந்துதல். |
|
|