பாடல் எண் :3428

பின்னொருநா டிருவாரூர் தனைப்பெருக நினைந்தருளி
உன்னவினி யார்கோயில் புகுந்திறைஞ்சி யொற்றிநகர்
தன்னையக லப்புக்கார் தாஞ்செய்த சபதத்தான்
முன்னடிக டோன்றாது கண்மறைய மூர்ச்சித்தார்.
274

(இ-ள்.) பின்னொருநாள்....நினைந்தருளி - பின்னர் ஒரு நாள் திருவாரூரினை மிகவும் பெருக நினைந்து கொண்டு; உன்ன.....இறைஞ்சி - நினைக்க இனிமை தருபவராகிய ஆதிபுரி ஒற்றிகொண்டாரது திருக்கோயிலினுட் புகுந்து வணங்கி; ஒற்றிநகர்....புக்கார் - திருவொற்றியூரினை நீங்கப் புகுந்தனர்; (அப்போதே); தாஞ்செய்த....மூர்ச்சித்தார் - தாம் செய்த சபதத்தின் காரணத்தினாலே முன்னே செல்ல அடிவைக்கும் நிலைதோன்றாது கண் ஒளி மறைய மூர்ச்சித்தனர்.
(வி-ரை.) பின் - முன்கூறியபடி திருவாரூரிறைவரை நினைந்து ஏசறவாற்றிருப்பதிகம் அருளிய பின்.
பெருக நினைந்தருளு தலாவது தடுக்கலாகாதபடி ஆசை தம்மை மேற்கொண்டு வலிந்தெழுமாறு நினைவு கூர்தல்.
உன்ன இனியார் - ஆதிபுரி இறைவர்; "எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக்கினியவாறே" (தேவா -நம்பி - கருப்பறி); "நினைத்தொறும்...ஆனந்தத் தேன்சொரியும்" (திருவா). இனிப் பின்னரெல்லாம் இவரை நினைத்தலேயன்றி நேரே கண்டு வழிபடுமாறில்லை என்று குறிப்பும் உன்ன என்றதனால் பெறப்படும்; மேல் "மீளா நிலைமை" என்பதும் காண்க.
புகுந்திறைஞ்சி - விடைபெற்றுச் செல்லும்வகையாற் கோயிலினுள்புக்கு வணங்கி.
அகலப்புக்கார் - திருவொற்றியூர் எல்லையினைக் கடந்து அடிபெயர்த்தார்.
தாஞ்செய்த சபதம் - மகிழ்க்கீழே தங்குமிடம் கொள்ளும்படி தாமே செய்து கொண்டவினை என்பது.
அடிகள் முன் தோன்றாது - அடிகள் பெயர்த்து முன்வைக்கும் நிலைதோன்றாதவாறு.
மூர்ச்சித்தார் - எதிர்பாராதவாறு சடுதியில் நேர்ந்த துன்பமாதலின் அவசமாயினா, மூர்சசையுறுதல் சிறிது போது மயங்கும் நிலை.