பாடல் எண் :3429

செய்வதனை யறியாது திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
"மைவிரவு கண்ணார்பாற் சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதா" மெனநினைந்"தெம் பெருமானை
எய்தியவித் துயர்நீங்கப் பாடுவே"னெனநினைந்து,
275

(இ-ள்.) செய்வதனை....நெடிதுயிர்ப்பார் - மேற் செய்யப்படுவதின்னது என்றதனை அறியாமல் திகைத்துப் பெருமூச்சு விடுபவராகிய நம்பிகள்; மைவிரவு....என நினைந்து - மைதீட்டிய கண்களையுடைய சங்கிலியாரிடத்துச் செய்த சத்தியத்தினை மீறிய காரணத்தினாலே இந்தத் தீவினைப் பயன் வந்து பொருந்தியதாகும் என்று நினைந்து; எம்பெருமானை...என நினைந்து - எமது பெருமானை என்பாற் பொருந்திய இத்துன்பம் நீங்கும்படி பாடுவேன் என்று எண்ணி,
(வி-ரை.) செய்வதனை....நெடிதுயிர்ப்பார் - இவை மூர்ச்சை தெளிந்த பின் நம்பிகள் அடைந்த நிலைகள்; மேற்செய்வது தோன்றாமை - திகைத்தல் - நெடிதுயிர்த்தல் என்பவை ஒன்றன்பின் ஒன்றாக வருவன. நெடிதுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல்; உயிர்ப்பார் - உயிர்ப்பாராகிய நம்பிகள்; வினையாலணையும் பெயர்.
உயிர்ப்பார் - நினைந்து (3429) உரைப்பார் - பரவி - நினைவார் - (3430) போந்து - பாடி (3431)- வருவார் - அடைந்தார் (3432) என்று இந் நான்கு பாட்டுக்களையும் முடித்துக்கொள்க.
மைவிரவு...எனநினைந்து - சூளுறவு - சபதம்.
மறுத்தல் - மீறி நடத்தல்; மறுத்ததனால் இவ்வினைவந்தெய்தியதாம் என நினைந்து - சபதத்தைக் கடந்ததனால் இவ்வாறு கண் மறைந்தது என்று நினைந்து துணிந்து.
இனி, ஈண்டு, இவ்வாறு, சபதத்துக்கு மாறாக நடந்தபோது கண்மறையுமோ? ஆயின், இந்நாளில் "நான் சொல்வது சத்தியம்; முழுதும் சத்தியம்; சத்தியமன்றி வேறில்லை; கடவுளறியச் சத்தியம்" என்று சூளுரைத்துப் பொய்யேயன்றிச் சிறிதும் மெய்யின் கலப்புமில்லாது மனமாரப் பொய்ச்சான்று கூறுவோர் அதனால் ஒரு துன்பமுமின்றிச் சுகமாய் மிக்கு நிகழும் காலத்தில் இதனை நம்புவார்? என்று கூறி எக்கலிப்போர் பலருளர். அவரெல்லாம் காலத்தினியலும், அவ்வவர் நிலையும், காலமும் பிறவும் சார்ந்து செல்லும் கன்மநியதியும் அறிந்திலர். உண்மையின் விளக்கம் யுகந்தோறும் மாறுபடும் என்பது ஞானநூல்களின் துணிபு மட்டுமேயன்றி அனுபவத்தும் கண்டது. இதுபற்றியே தருமதேவதை முதல் யுகத்தில் நான்கு கால்களாலும், இரண்டாவதில் மூன்று கால்களாலும், மூன்றாவது நான்காவது யுகங்களில் முறையே இரண்டு கால்களாலும், ஒரு காலாலும் நடக்கும் என்பர். நான்காவதாகிய கலியுகத்தில் அதன் தன்மைக்கேற்றவாறு சத்தியத்தின் வெளிப்பாடு மெத்தென நிகழும்; ஆனாலும் எவ்வாற்றானும் நிகழ்ந்தேவிடும்; பிறழாது. உடனே நிகழாமை கண்டு உண்மைக் கிடமில்லை என முடித்து வாய் வேண்டின சொல்லித் திரிதல் அடாது; "செம்பொன் மேனிவே றாகிநாலாம், பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துருவாகி மன்னும்" (திருவிளை. புரா -இரசவா - 30); "உவாவள ரனைய கானத்துறுகலி யுகத்தை யஞ்சித், துவாபர யுகவந்தத்திற் றொக்கனர் தவங்க ளாற்றும், அவாவறு வசிட்டர் வச்ச ரகத்தியர் வாம தேவர், தவாதநல் லொழுக்கஞ் சான்ற சவுனக ராதியானோர்" (8); "பரவிய வாண்டு நூற்றுப் பத்துற முடிவு செய்யும் பிரம சத்திரயா கத்தைப் பேணினர் வளர்க்க லுற்றார்" (9) என்ற பேரூர்ப் புராணம் நைமிசப்படல வரலாறும், பிறவும் கருதுக. காலத்தினால் உண்மையின்நிலைமாறுமோ? என்னின், மாறாதுதான்; ஆனால் அதன் வெளிப்பாட்டு நிலைமாறும் என்க; ஆண்டுதோறும் வரும் பெரும்பொழுது சிறுபொழுது என்ற காலக் கூறுபாட்டுக்கேற்ப உலகுயிர்களின் முயற்சி ஒழுக்கம் முதலியவை அவை தம்மாலன்றியே மாறுபடக் காண்டல் கண்டுகூடு; காலம் என்றதொரு தத்துவம் உண்டு; அதுவித்தியா தத்துவங்க ளேழனுள் ஒன்று; "காரியங்கள், காலமே தரவே காண்டுங்; காரணன் விதியி னுக்குக், காலமுங் கடவு ளேவ லாற்றுணைக் கார ணங்காண்" (1-10) என்ற சிவஞான சித்தியாரும் காண்க; சபதம் பொய்த்து மாறுபட்டவர்களின் சரிதங்களையும் முடிவுகளையும் நன்கு தெரிந்து சென்றால் இவ்வுண்மை விளங்கும்1
சூளுறவு மறுத்ததனால் இவ்வினை வந்து எய்தியதாம் - இது காட்சி, கருதல், உரை என்ற மூன்றளவைகளானும் தொகுத்துக் கண்ட முடிபு.
மைவிரவு கண்ணார் - சங்கிலியார்.
எய்திய வித்துயர் நீங்க எம்பெருமானைப் பாடுவேன் - என்க; எய்திய - வினைக்கீடாக வந்து பொருந்திய; எனது செயலின் விளைவாக வந்த.
இத்துயர் நீங்க எம்பெருமானைப் பாடுவேன் - தகாதவற்றைச் செய்து அதன் பயனாகத் துன்பம் வந்தபோது இறைவரைப் பாடினால் அது நீங்கி விடுமோ? இவ்வாறாகிய கொள்கைகள் அல்லவை செய்தொழுகுவார் மறைந்து கொள்ளவும் தீயவற்றைத் துணிந்து செய்யவும் இடந்தருகின்றன என்று அறைகூவுவோர் பலர் இந்நாளிற் காணப்படுகின்றனர்; தீச்செயல்களில் உயிர்களைப் புகுத்துவது அறியாமை மயமாகிய இருள் மலத்தின் செயலாம்; அது தீச்செயல் என்று தெளிந்து தீர்வுதேடுதல் இறைவன் அறிவிக்க அறியப்படும் அறிவின் செயல்; ஆதலின் அவ்வறிவின் உதவி கொண்டே தீர்வுதேடுதல் அறிவு பெற்ற நியமமாகும். விதிகடந்து அல்லவை செய்து பிணிகளைத் தேடிக் கொண்டானொருவன் மருத்துவனை நாடி அவன் றுணை கொண்டு நோயினின்றும் நீங்க முயலுதல் போல, ஈண்டு இறைவரைப் பாடுதல் தமது தவறிய செயலால் விளைந்த துன்பம் நீங்குதற்கு மருந்தாகுமென்பது உண்மை நூற்றுணிபு; நோயினையும் அது வந்த வரலாற்றினையும் உண்மைபெற மருத்துவனிடம் முறையிட்டபோது மருத்துவன் அதன்மூலம் வந்தவாற்றிற் கேற்றபடி மருந்தும் பாகமும் வகுத்துத் தீர்ப்பது போலக், கன்மவைத்தியநாதராகிய இறைவரும் கன்ம விளைவாகிய நோயினை அனுபவித்துக் கழிப்பிக்க ஏற்ற காலம் முதலிய பாகங்களை வகுத்துத் தீர்ப்பர். அவரை எண்ணுதலும் துதித்தலும் அத்தீர்வுக்கு அவர் விதித்த பக்குவங்களும் மருந்துகளுமாகும். கன்மநோய் அனுபவித்தன்றிக் கழியா தென்பது உண்மை; மக்கள் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்து கழிவிரக்கங்கொண்டு உண்மை
__________________________________________________1. இதுபற்றி எனது அனுபவத்தில் கண்ட பலவற்றுள் சில உதாரணங்கள் இங்குச் சொல்லத் துணிகின்றேன். ஒன்று: ஒரு பெருஞ்செல்வர்; கிரிமினல் கோர்டில் சாட்சிப் பெட்டி ஏறிப் பொய்ச்சூள் உரைத்தார்; அது முடிந்து பெட்டியை விட்டுக் கீழிறங்கும் போதே கண் மறைந்துவிடப் பிறருதவி கொண்டு கையாலும் காலாலும் தடவி வழியறிந்து சென்றனர். கண் மறைந்தது மறைந்ததுதான். அவர் இறக்கும்வரை அவ்வாறே. இனி, மற்றொன்று: சிவில் கோர்டில் ஒரு பெருஞ் செல்வர் - சாட்சிப் பெட்டியேறிப் பொய்ச்சூள் உரைத்தனர்: அது வாறாக நோய் கிடந்து ஒரு மாதத்தில் இறந்துபட்டனர். இப்படி அனேகமுண்டு. ஆதலின் உலகீர்! சபதம் பொய்த்த விளைவு உடன் காணாதது கொண்டு இல்லை என்று முடித்துத் திரிந்து கேடு சூழ்ந்துகொள்ளாது முன்னோர் கண்ட உண்மை நெறிநின்று ஒழுகி உய்யுங்கள்.யாகக் கசிந்து உருகி உருகி அவனை நோக்கி முறையிடுவரேல் அவன் இரங்கி அவர் தந் துயர் தீர்த்தல் ஒருதலை என்று ஈண்டு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு. பாவமன்னிப்பு என்பது சைவசமயக் கொள்கைகளுக்கு உடன்பாடன்று; அது கிறித்துவம் முதலிய புறச்சமயிகள் கொள்கையாம்; அதுவே மக்களைத் தீயசெயல்களுட் புகுத்தும் தூண்டுகோலாய் நிற்கும்; ஆனால் சைவசமயங் கண்டவுண்மையாவது இறைவரை எண்ணித் துதித்தலால் அஃது அந்நோய்க்கு மருந்தாக நின்று அதனுள் இறைவர் விளங்கிக் கன்மபரிபாகம் நிகழ அருளிக் கன்மானுபவத்தை உடலூழாய்க் கழியவோ, அன்றி விரைந்து அனுபவித்துக் கழியவோ, அன்றி வேறு அவ்வவர் துன்பம் அறியாமற் கழியவோ, அன்றி வேறெவ்வாறே ஊட்டுவித்து அருள் புரிவன் என்பதாம். "ஆட்பா லவர்க் கருளும் வண்ணமுமாதி மாண்பும், கேட்பான் புகி லளவில்லை கிளக்க வேண்யா!, கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலைநின் றிவை கேட்கதக்கார்", என்ற திருப்பாசுரமுமழு, சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்ழு என்றற் றொடக்கத்த திருவாக்குக்களும் ஈண்டுக் கருத்த்தக்கன. ழுதொழுவார் வினைமாயுமேழு, "வினைஓடுமே" என வருவன எல்லாம் இவ்வா றறியத்தக்கன. ஈண்டும், மேல்வரும் வரலாறுகளிலும் பலபடியும் மனம்போனவாறு பிதற்றும் ‘அறியா வாய்மை எண்டிசை மாக்கள்' இவற்றை யெல்லாம் உணர்ந்து உய்வார்களாயின் நலமாகும்.