பாடல் எண் :3430

"அழுக்கு மெய்கொ"டென் றெடுத்தசொற் பதிக
மாதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பத முன்னி
"இழுக்கு நீக்கிட வேண்டு"மென் றிரந்தே
யெய்து வெந்துயர்க்கையற லினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்,
276

(இ-ள்.) அழுக்கு மெய் கொடு என்று....ஓதி - "அழுக்கு மெய் கொடு" என்று தொடங்கும் சொற்பதிகத்தினை நெடிய ஆதிபுரி இறைவரைத் துதித்து; வழுத்து...உரைப்பார்....போற்றுகின்ற மனத்துடனே நிலமுறவீழ்ந்து வணங்கி முன்பு நின்று சொல்வாராகி; மாதொர்பாகனார்....உன்னி- உமைபாகரது மலர்போன்ற பாதங்களை நினைந்து நினைந்து; இழுக்கு...இரந்தே - குற்றத்தினை நீக்கியிடவேண்டும் என்று வேண்டிக்கொண்டு; எய்து....நினைவார் - அங்கு வந்து பொருந்திய கொடிய துன்பமுடைய கையறுநிலைக்கும் நேர்ந்த பழிக்கும் வெட்கமடைந்து நல்ல இசையினால் தோத்திரித்துப் பணிந்து மிகவும் பலபலவாறு நினைவாராகி,
(வி-ரை.) "அழுக்கு மெய்கொடு" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
நீள் ஆதிபுரி அண்ணல் - என்க; திருவொற்றியூரிறைவர். இப்பதிகம் திருவொற்றியூ ரெல்லையினைக் கடந்து நின்ற இடத்திற் பாடிய குறிப்பு.
"இழுக்கு நீங்கிட வேண்டும்" என்று - இது பதிகக் கருத்தாகிய குறிப்புஎன்று ஆசிரியர் காட்டியருளியவாறு.
எய்து வெந்துயர்க் கையறவினுக்கும் பழிக்கும் வெள்கி - கையறவு - பற்றுக் கோடிழந்த நிலை; கணணிழந்தமையால் தம்மைப் பாதுகாக்கவும் நெறி காணவும் தம்மால் இயலாது பிறருதவியை நாட நின்ற நிலை; பழி - சபதம் பிழைத்தமையாற் கண்ணிழந்தார் என்றும், மங்கையார்பாற் சூளுறவு பிழைத்த வன்கண்ணர் என்றும், பிறவாறும் உலகர் கூறும் பழிச்சொல்.
சாலவும் பலபல நினைவார் - பதிகத்துள் வரும் பற்பல வகைக் கருத்துக்களும் பார்க்க.