அங்கு நாதர்செய் யருளது வாக வங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே பொங்கு காதன்மீ ளாநிலை மையினாற் போது வார்வழி காட்டமுன் போந்து திங்கள் வேணியார் திருமுல்லை வாயில் சென்றி றைஞ்சிநீ டியதிருப் பதிகஞ் "சங்கிலிக் காக வென்கணை மறைத்தீ" ரென்று சாற்றிய தன்மையிற் பாடி, | 277 | (இ-ள்.) அங்கு....அருள் அதுவாக - அங்கு அப்போது இறைவர் செய்யும் அருள் அதுவேயாகி அமைந்திட; அங்கை கூப்பி - அழகிய கைகளைச் சிரமேற் கூப்பி வணங்கி; ஆரூர் தொழ...போந்து - திருவாரூரினைச் சென்று தொழுவதற்கு நினைந்தவாறே பொங்கி எழுகின்ற பெருவிருப்பத்தினாலே திருவொற்றியூரினில் மீளாத நிலைமையினை மேற்கொண்டு உடன் செல்வோர்கள் தமக்கு வழிகாட்டியிட முன்னே சென்று; திங்கள்வேணியார்...இறைஞ்சி - சந்திரனைச்சூடிய சடையினை உடைய இறைவரது திருமுல்லைவாயிலிற் சென்று வணங்கி; நீடிய...பாடி - பெருமை நீடிய திருப்பதிகத்தினைச் "சங்கிலியின் பொருட்டு என் கண்களை மறைத்தீர் என்று ஏத்திய தன்மை விளங்கும்படி பாடியருளி, (வி-ரை.) அங்கு....அருள் அதுவாக - நம்பிகள் விண்ணப்பித்தும் இறைவர் வாளா இருந்தனர்; அது வாளா இருந்தமை; அதனையே அருள் என்றார். இறைவர் செய்வன யாவும் அவ்வந் நிலையில் காணும் அருளேயாவன என்பது; "எக்கிர மத்தி னாலு மிறைசெய லருளே யென்றும்" (சித்தி -2-15). காதல் மீளா நிலைமையினால் - ஆரூர் தொழும் காதல் காரணமாகத் திருவொற்றியூரின் மீண்டணைய எண்ணாது, கண்ணிழந்தமையும் பொருட்படுத்தாது மேலே தொடர்ந்து செல்லும் நிலையினை மேற்கொண்டு; மூளாநிலை - அன்று அந்நிலையிற் றிரும்பாமையேயன்றி இனி, மேலும் மீண்டு வாராமையும் குறிப்பு; சரிதம் காண்க. போதுவார் வழிகாட்ட - உடன் போதுவார்களாகிய பரிசனங்கள் கைப்பற்றி வழிகாட்டிச் செல்ல; இதனை "ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை" (பதிகம்) என்றிழிவு தோன்ற வருளினர் நம்பிகள். நீடிய திருப்பதிகம் - நீடிய - நம்பிகளது சரித நிகழ்ச்சியினைப் பற்றி உள்ள நிலையினையும் அன்பின் உறைப்பினையும் உள்ளவாறு பளிங்கு போலப் புலப்படுக்கும் பெருமையினால் நீடிய. "சங்கிலிக்காக என்கணை மறைத்தீர்" என்று சாற்றிய தன்மை - பதிகக் கருத்தும் குறிப்புமாம்; [பதிகம் (2)] பதிகத்தின் மகுடமாகிய பிரார்த்தனையை மேற்பாட்டிற் கூறுவார்; தன்மை - குறிப்பு. |
|
|