தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந் தொல்லை வண்புகழ் முல்லைநா யகரைக் "கொண்ட வெந்துயர் களை" கெனப் பரவிக் குறித்த காதலி னெறிக்கொள வருவார் வண்டு லாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடுவெண் பாக்கங் கண்ட தொண்டர்க ளெதிர்கொள்ள வணங்கிக் காயு நாகத்தர் கோயிலை யடைந்தார். | 278 | (இ-ள்.) தொண்டைமானுக்கு....பரவி - தொண்டைமானுக்கு முன்னாளில் அருள்கொடுத்தருளிய பழமையாகிய வள்ளன்மையும் புகழுமுடைய திருமுல்லைவாயி லிறைவரைக் "கொண்ட எனது வெவ்விய துயரினைக் களைந்திட வேண்டும்" என்று துதித்து மேற்சென்று; குறித்த....வருவார் - தாம் குறிக்கொண்ட பெருவிருப்பின் வழியே ஒழிச்செல்ல வருவாராகி வண்டுலாம்...வணங்கி - வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து மாடமாளிகைகள் நீடி விளங்கும் திருவெண்பாக்கத்தினைக் கண்ட தொண்டர்கள் எதிர் கொள்ள அறிந்து வணங்கி; காயும்...அடைந்தார் - கோபிக்கும் யானையை உரித்தவராகிய இறைவரது திருக்கோயிலினை அடைந்தருளினர். இந் நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை.) தொண்டைமானுக் கன்று அருள் கொடுத்தருளும் - இது தல சரிதம்; "சொல்லரும் புகழான்" (10) என்ற பதிகமும் தல விசேடமும் பார்க்க. தொல்லை வண்புகழ் - மிகப்பழமையும் வள்ளன்மையுமுடைய புகழ் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் முல்லைத்திணை பற்றிய கருத்துக்கள் காண்க. "கொண்ட வெந்துயர் களைக" என - இது பதிகத்தின் பிரார்த்தனை; "அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே" என்பது பதிகத்தின் மகுடம். குறித்த காதலின் நெறிக்கொள - குறித்த காதல் - திருவாரூரினைச் சென்றடையும் பெருவிருப்பம்; குறித்த - சிறியாகக் கொண்ட; நெறிக்கொள - அவ்வழிச் செல்ல. கண்ட தொண்டர்கள் எதிர்கொள - தாம் எழுந்தருளுதலைக் கண்ட அப்பதியில் தொண்டர்கள் வந்து எதிர்கொள்ள; வெண் பாக்கம் வணங்கி என்று கூட்டுக. மாட மாளிகை நீடு வெண்பாக்கம் - இத்தலம் இப்போது பாண்டி நீர்த்தேக்கம் என்னும் பரந்த ஏரியினுள் அகப்பட்டு நீரினுள் மறைந்துள்ளது; தலவிசேடம் பார்க்க; நீடு - என்பது பிற்றைஞான்று நீரினுள்ளே பொதிந்து நிலை பெற நின்ற என்ற குறிப்பும் தந்து நின்றது. காயும் நாகத்தர் - காய்தல் - கோபித்தல் என்ற பொருளில் வந்தது; காயும் - தம்மாற் காயப்படும் என்றலுமாம். நாகம் - யானை; கோபமுடைய யானை என்க; நாகம் - பாம்பு என்று கொண்டு பாம்பினை அணியாக உடையவர் என்றலுமாம். |
|
|