அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக வங்க ணாயகர் கோயில்முன் னெய்திக் குணங்க ளேத்தியே பரவியஞ் சலியாற் குவித்த கைதலை மேற்கொண்டு நின்று வணங்கி "நீர்மகிழ் கோயிலு ளீரே" யென்ற வன்றொண்டர்க் கூன்றுகோ லருளி இணங்கி லாமொழி யா"லுளோம்; போகீ!" ரென்றி யம்பின ரேதிலார் போல. | 279 | (இ-ள்.) அணைந்த...எய்தி - முன்கூறியபடி எதிர்கொள வந்தணைந்த தொண்டர்களுடன் கூடி வலமாக அங்கண்மையுடைய இறைவரது திருக்கோயிலின் முன் வந்து சேர்ந்து; குணங்கள்......வணங்கி -இறைவரது அருட்பெருங் குணங்களை எடுத்துத் துதித்தே போற்றி செய்து வணங்கி; நீர்....வன்றொண்டர்க்கு -"தேவரீர் மகிழும் இத்திருக்கோயிலினுள் வீற்றிருக்கின்றீரோ?" என்று கேட்ட வன்றொண்டருக்கு; ஊன்றுகோல்...போல -இறைவர் ஊன்று கோல் ஒன்று கொடுத்தருளி இணக்கமில்லாத மொழிகளால் "யாம் உள்ளோம்; நீர் போகீர்" என்று அன்னியர் போலச் சொல்லியருளினர். (வி-ரை.) அணைந்த - முன்பாட்டிற் கூறியபடி தாம் வருவதைக்கண்டு எதிர் கொள்ள வந்தணைந்த; தொண்டர்களுடன் - கண்ணிழந்த நிலையாதலின் தொண்டர்கள் தம்முடன் முன்செல்ல என்றது குறிப்பு. கோயில் - இறைவரது திருமுன்பு. "நீர் மகிழ் கோயிலுள்ளீரே?" என்ற வன்றொண்டர்க்கு - இது இறைவரை நோக்கி நம்பிகள் வினாவியது; உள்ளீரே - என்றதனால் தாம் நேரே கண்களாற் காண இயலாமையினைக் குறிப்பிலுணர்த்தியவாறு; தமக்கு அருள் செய்யாமையில் அங்குக் கோயிலில் விளக்கமாக வீற்றிருத்தலில்லை என்று கூறியதும் குறிப்பு. மகிழ் கோயில் உள்ளீரே திருவொற்றியூரிலும் பூ மகிழ்க்கீழும் கோயிலுள்ளும் மாறித் தங்கியதனை அறிந்தாராதலின் இங்கு மகிழடியிலா? அன்றிக் கோயிலினுள்ளா? என்றிரண்டி லொன்றனை உறுதிப்பட அறியவினவியது போன்ற குறிப்பும் காண்க; மகிழ் - கோயில் - பழமொழி போல வழங்கியதாகக் கொள்க. ஊன்றுகோல் அருளி - "ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்" (திருவொற்றி - 4) என்று கேட்ட அதுவேயாறாக ஈண்டு ஊன்றுகோல் அருளினர் என்பதாம். ஊன்றுகோல் அருளுதல் - பற்றுக்கோடாகிய அருள் உள்ளமை காட்டுதலாம். இணங்கிலா மொழியால் ஏதிலார் போல உளோம் பொகீர் என்றியம்பினர் என்க. இணங்கிலா மொழியாவது இணக்கமாக அன்பு காட்டாது அன்னியர் போலக் கூறுதல்; "ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம் போகீர் என்றானே" என்ற நம்பிகள் திருவாக்கு இதற்குச் சிறந்த அகச்சான்று; ஏதிலார் - ஏதும் பற்றில்லாத அன்னியர். போல - உண்மையாக ஏதிலார் அன்று என்பதாம். உளோம் போகீர் - கோயிலுளீரே என்று கேட்டமையின், நாம் இருக்கின்றோம் - நீர் போவீராக என்றது இறைவர் திருவாக்கு. இக்கோயில் இதனால் உளோம் போகிர்புரம் என வழங்கும் வழக்கும் கல்வெட்டுக்களிற் காண உள்ளது. இது சரித அகச்சான்று. ஏத்தியே பரவி - இப்பதிகம் வேறு; இது கிடைத்திலது. மேற்பாட்டிற் கூறும் பதிகம் ஊன்றுகோலருளி உளோம் போகீர் என்ற பின்னர்அத்திருவருளை எண்ணிப் போற்றிப் பாடியது. |
|
|