"பிழையுளன பொறுத்திடுவ" ரென்றெடுத்துப் பெண்பாகம் விழைவடிவிற் பெருமானை வெண்பாக்க மகிழ்ந்தானை இழையெனமா சுணமணிந்த விறையவனைப் பாடினார் மழைதவழு நெடும்புரிசை நாவலூர் மன்னவனார். | 280 | (இ-ள்.) பிழை....எடுத்து - "பிழையுளன பொறுத்திடுவர்" என்று தொடங்கி; மழைதவழும்...மன்னவனார் - மேகங்கள் தவழ்தற்கிடமாகிய உயர்ந்த மதில்களையுடைய திருநாவலூரின் தலைவராகிய நம்பிகள்; பெண்பாகம்....பாடினார் - உமையம்மையாரை ஒரு பாகத்தில் இருத்தலை விரும்பிய பெருமானை, திருவெண்பாக்கத்தினை மகிழ்ந்தவரை, சங்கராபரணம் என்று அடியார்போற்றப் பாம்பினை அணிந்த இறைவரைப் பாடினார். (வி-ரை.) பிழை...எடுத்து - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. பெண்பாகம்....இறையானை என்றது கருணைக்கிருப்பிட மாதலையும், வெண்பாக்கம் மகிழ்ந்தான் என்றது வெளிப்பட்டருளியுள்ள இடத்தினையும் மாசுணம் அணிந்தான் - என்றது தீமையையும் நன்மையாக ஏற்றுக்கொள்ளும் நிலையினையும் உட்குறிப்பாகக் கொண்டு நம்பிகள் தமது குறையினை விண்ணப்பித்த குறிப்புக்களாம். "ஒண்ணுதலி பெருமானார்" (6), "சேயிழையோ டுடனாகி" (4), "நுண்ணிடையான் பாகமா" (5), "வாரிடங்கொள் வனமுலையா டன்னோடும்" (8), "இங் கிருந்தாயோ" (9) "வெண்பாக்க மிடங்கொண்ட" (11), "விடநாகன்" "பையரவா" (2-3) என்பன பதிகம்; விழை - விரும்பும்; இழை - சங்கராபரணம்; மாசுணம் - பாம்பு. மழை -அதற்குக் காரணமாகிய மேகம் என்ற பொருளில் வந்தது; ஆகுபெயர்; புரிசை - மதில். |
|
|