முன்னின்று முறைப்பாடு போன்மொழிந்த மொழிமாலைப் பன்னுமிசைத் திருப்பதிகம் பாடியபின் "பற்றாய என்னுடைய பிரானருளிங் கித்தனைகொ லா"ெமன்று மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார், | 281 | (இ-ள்.) முன் நின்று....பாடியபின் - திருமுன்பு நின்று முறைப்பாடு உரைப்பார் போன்று மொழிந்த சொன்மாலையாகிய பன்னும் இசையுடன் கூடிய திருப்பதிகத்தினைப்பாடிய பின்பு; பற்றாய என்னுடைய...என்று -"ஆதரவாகிய என்னுடைய பெருமானாரது திருவருள் இங்கு இத்தனை அளவே யிருந்தது போலும்" என்று உட்கொண்டு; மன்னு....வழிக்கொள்வார் - நிலைபெற்ற பெரிய தொண்டர்களுடன் இறைவரை வணங்கி மேலே வழிச் செல்வாராகி, (வி-ரை.) முறைப்பாடு போல் மொழிந்த தமிழ்மாலை - இப்பதிகத்தினை நம்பிகள் இறைவர்பால் தமது குறைகளை எடுத்தியம்பி முறையிட்டதுபோல அருளினாரன்றி, உண்மையில் அது மகிழ்ச்சியுடன் அன்பு ததும்ப இறைவரது அருளைப் போற்றிப் புகழ்ந்தபடியேயாம் என்று குறிக்கப் போல் மொழிந்த என்றார். "காதலித்திட் டன்பினொடும்" (11) என்றது காண்க; அன்றியும் இப்பதிகம் "கோயிலுளீரே" என்று நம்பிகள் கேட்க, அதற்கு ஊன்று கோலருளி "உளோம் போகீர்" என்று இறைவர் விடையும் அருளிய பின்னர், அவ்வருளிப் பாட்டினைத் தோழமை முறையினாற் பாராட்டிப் போற்றிய திறமும் கண்டு கொள்க. பன்னுமிசை - பன்னுதல் - பலவாறும் எடுத்து இயம்புதல்; இசை - பதிகப் பண்ணாகிய சீகாமரம்; இசை - புகழ் என்றலுமாம். பற்றாய...என்று ஊன்றுகோலருளி "உளோம் போகீர்" என்ற இந்தஅளவே ஈண்டு இறைவரது அருள் போலும் என்று துணிந்து; "அங்கு நாதர்செயருளதுவாக" (3431) என்றவிடத் துரைத்தவை பார்க்க. பற்று - பற்றுக்கோடு; ஆதரவு. ஊன்றுகோல்தானும் ஓர் ஆதரவாக ஏற்றமை குறிப்பு. பெருந்தொண்டர் பெருமை நம்பிகளுடன் பணி செய்துடனிருக்கும் பெரும் பேறு. வழிக்கொள்வார் - மேலே திருவாரூரை நோக்கி வழியிற் செல்வாராகி; முற்றெச்சம்; வழிக்கொள்வார் - போய் - எய்தித் - தங்குவார் (3436) - ஏத்துவார் - போய் - அணைந்தார் (3437) என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. |
|
|