முன்னின்று தொழுதேத்தி "முத்தா"வென் றெடுத்தருளிப் பன்னுமிசைத் திருப்பதிகம் பாடிமகிழ்ந் தேத்துவார் அந்நின்று வணங்கிப்போய்த் திருவூற லமர்ந்திறைஞ்சிக் கன்னிமதின் மணிமாடக் காஞ்சிமா நகரணைந்தார். | 283 | (இ-ள்.) முன்நின்று....ஏத்துவார் - திரு முன்பு நின்று வணங்கித்துதித்து "முத்தா" என்று தொடங்கியருளிப் பன்னும் இசையினையுடைய திருப்பதிகத்தினைப்பாடி மகிழ்ச்சியுடனே துதிப்பாராகி; அந்நின்று...போய் - அந்நிலைக் கண் நின்று வணங்கி மேலே சென்று; திருஊறல் அமர்ந்திறைஞ்சி - திருஊறல் என்னும் பதியினை விரும்பிச்சென்று வணங்கி; கன்னி....அணைந்தார் - பகைவரால் அழிக்கப்படாத திருமதிலினையும் அழகிய மாடங்களையுமுடைய காஞ்சிமா நகரத்தினை வந்து அணைந்தருளினர். இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. (வி-ரை.) முன்நின்று தொழுது - பதியின் புறத்து அயலில் திருக்கோயிலை நோக்கியவாறே திருமுன்பு நின்று வணங்கி; முன்னரும் "முன்னின்று - மொழிந்த" என்றார்; கண்ணொளி யிழந்த நிலையாதலின் முன்னிற்றல் மாத்திரையால் அமைந்து அகக்கண்ணாற் கண்டு வணங்கி என்பது குறிப்பு. "முத்தா" என்று எடுத்தருளி - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. பன்னுமிசை - பன்னும் - 3435 பார்க்க. இசை - பதிகப்பண்ணாகிய பழம் பஞ்சுரம். அந்நின்று - அங்கு நின்றும்; அந்நிலையினின்றவாறே; என்றலுமாம். அந்நிலையே என்ற பாடமுமுண்டு. திருவூறல் அமர்ந்து இறைஞ்சி - அமர்ந்து - விரும்பி. கன்னிமதில் - பகைவரால் அழிக்கப்படாத மதில்; மதில் எடுத்த ஞான்று உள்ளவாறே உள்ளது. காஞ்சிமாநகர் முத்தித்தலங்கள் ஏழனுள் ஒன்றாகிய பெருநகர்; தொண்டை நாட்டின் தலைநகர்; என்பன முதலிய பெருமைகள் குறிக்க மாநகர் என்றார். குறிப்பு :- திருவொற்றியூர் எல்லையினைத் தாண்டியவுடன் கண்மறைந்தநிலையில் வழிகொண்ட நம்பிகளது அந்தத் துன்ப நிலையில் வழிச் செலவை இடையில் தங்கவைத்தல் முதலாகிய இடையீடின்றி துன்பம் நீடிக்காது வரலாறு கூறிப்போகும் கவிநயம் கண்டுகொள்க; நம்பிகள் திருவொற்றியூரினின்றும் புறப்பட்டுத் திருக்காஞ்சி மாநகரம் அணையும் வரையில், ஊன்றுகோ லருளப்பெற்ற திருவெண்பாக்கத்தில் அவ் வருளிப்பாட்டின் பொருட்டு ஒருவினை முடிபுகாட்டி, இயம்பினர் (3433) பாடினார் (3434) என்று வினைமுற்றுத் தந்து முடித்ததன்றி, ஏனைய பதிகளில் எல்லாம் வினையெச்சங்களால் கூறிக்கொண்டு செலுத்திக், காஞ்சியில் ஒரு கண் பெறும் அளிப்பாடு குறிக்க அணைந்தார் என வினைமுற்றுந் தந்து முடித்தல் காண்க |
|
|