"விண்ணாள்வா ரமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட கண்ணாளா! கச்சியே கம்பனே! கடையானேன் எண்ணாத பிழைபொறுத்திங் கியான்காண வெழிற்பவள வண்ணா!கண் ணளித்தருளா!" யெனவீழ்ந்து வணங்கினார். | 286 | (இ-ள்.) விண்ணாள்வார்...கண்ணாளா! - விண்ணுலகத்தை ஆளும் தேவர்கள் அமுதத்தை உண்ணும் பொருட்டுமிக்க பெரிய விடத்தினை உண்டருளியகண்ணாளரே!; கச்சி ஏகம்பனே! - திருக்கச்சித் திரு ஏகம்பத்தில் வீற்றிருக்கின்றவரே!; கடையானேன்...என - கடையவனாகிய நான் எண்ணாமற் செய்த பிழையினைப் பொறுத்தருளி இங்கு அடியேன் காணும்படி அழகிய பவளம் போன்ற வண்ண முடையவரே கண் அளித்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு; வீழ்ந்து வணங்கினார் - நிலம் பொருந்த விழுந்து வணங்கினார். (வி-ரை.) விண்ஆள்வார்...கண்ணாளா! - விண்ஆள்வார் என்றது மேலாகிய விண்ணுலகத்தினை ஆள்வோராயினும் விடத்தினை மாற்றலாகாது வருந்தினர் என்பது குறிப்பு. மிக்கபெரும் - பெரிய கொடுமை குறித்தது. மிக்கபெரு விடமாயினும் என்று சிறப்பும்மை தொக்கது. கண்ணாளா - அருமைப்பாடு குறித்தது. அருணோக்கம் செய்பவர் என்ற குறிப்பு; "ஆலந் தானுகந் தமுதுசெய் தானை" என்ற பதிகம் பார்க்க. விடமுண்டு அமுதீந்தமை போலப் பிழைபொறுத் தேன்றுகொண்டு கண்ணளிப்பாய் என்பது குறிப்பு. கச்சி ஏகம்பனே - என்பது அவர் வளிப்பட்டருளும் இடமும், பவனவண்ணா என்பது அவரது வண்ணமும், விடமுண்ட என்பது அவரது தன்மையும் குறித்தன; "மன்ன மவனுடைய நாமங் கேட்டாள்" (தேவா) என்ற திருவாக்குக் கருதுக. பின்னர்த் திருவாரூரிலும் இவ்வாறே இம்மூன்று தன்மைகளாற் பரவியமையும் (3462) காண்க. கடையானேன் எண்ணாத பிழை - பிழை செய்யும் நோக்கத்துடன் எண்ணிச் செய்த பிழையன்று என்பது; "புந்தி நண்ணாத வினை" (சிவப் - 30); "உன்சீலமுங் குணமும் சிந்தியாதே" (நம்பி - ஒற்றி - தக்கேசி - 6) என்றது காண்க. எண்ணிச் செய்த பிழையாயின் பொறுத்தலரிது; கன்மபலன் அனுபவிக்கச் செய்தே கழித்தல் வேண்டும்; இஃது எண்ணாத பிழையாதலின் அனுபவித்த அளவின்றி, இனிமேலு அனுபவம் வேண்டாது பொறுத்தல் கூடுமென்பது குறிப்பு. இங்கு - இவ்விடத்து; முன் திருமுல்லைவாயில், திருவெண்பாக்கம் முதலிய இடங்களிற் போலன்றி, இங்கே என்பது. காணப் பவளவண்ணா கண் அளிப்பாய் - மற் றொன்றன்பொருட்டுமன்றி உனது அழகிய பவள வண்ணத்தைக் காணும் பொருட்டுக் கண் அளிப்பாய் என்றது பவளவண்ணா என்றழைத்த விளியின் குறிப்பு; "எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்ற வாரே என்ற பதிகம் காண்க. "கண்காள் காண்மின்களோ?" (தேவா) பிழை பொறுத்தின்றியான் - என்பதும் பாடம். |
|
|