ஞாலந்தா னிடந்தவனு நளிர்விசும்பு கடந்தவனு மூலந்தா னறிவரியார் கண்ணளித்து முலைச்சுவட்டுக் கோலந்தான் காட்டுதலுங் குறுகிவிழுந் தெழுந்துகளித் "தாலந்தா லுகந்தவ"னென் றெடுத்தாடிப் பாடினார். | 288 | (இ-ள்) ஞாலந்தான்....அறிவரியார் - நிலத்தைக் கீண்டு தேடிய திருமாலும் குளிர்ந்த ஆகாயத்தைக் கடந்த பிரமதேவனும் முறையே அடிமுடிகளின் முடிபினை அறிதற்கரிய இறைவர்; கண்அளித்து.....காட்டுதலும் - அம்மை தழுவ முலைச் சுவடணிந்த தமது கோலத்தை ஒரு கண் கொடுத்துக் காணும்படிக் காட்டுதலும்; குறுகி....பாடினார் - அணுகி நிலமுற விழுந்து எழுந்து மகிழ்ந்து "ஆலந்தானுகந்தவன்" என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக் கூத்தாடினார். (வி-ரை) ஞாலந்தானிடந்தவன் - விசும்பு கடந்தவன் - இடந்ததனாலும் கடந்ததனாலும் அறிவரியார் என்பார் அவ்வச் செயல்களை அவ்வவரோடும் உடம்பொடு புணர்த்தி ஓதினார்; முறையே அடிமுடிகளின் என்பது குறிப்பெச்சம். முலைச் சுவட்டுக் கோலம் - முலைச்சுவடணிந்தருளிய தமது திருக்கோலத்தை; "மாது மெய்ப்பயன்" கொடுப்பவே கொண்டு வளைத்த ழும்புடன் முலைச்சுவடணிந்தார்"(1143) என்றவிடத் துரைத்த இவ் வரலாறு காண்க. இதனையே மேலும் (3444) கூறி முடித்தல் காண்க. கண்ணளித்துக் - கோலம் - காட்டுதலும் - "காட்டுவித்தா லரரொருவர் காணாதாரே"(தேவா); புறக் கண்ணின்றியும் அகக்கண் கொண்டு சிவயோக நிலையிற் கண்டுகொண்டிருந்த நம்பிகளுக்குப் புறக்கண்ணுங் கொடுத்து அதனாலும் காணும்படி காட்டியருளினார் என்பதாம்; "காணக் கண்ணடியேன் பெற்ற வாறே" என்ற பதிகக்கருத்துக் காண்க; முதலில் அம்மையாரை வணங்கி யருள்பெற்றுப்(3438) போந்தமையால் அம்மையாரது முலையின் சுவடணிந்த கோலமே காட்டினார் என்பதும் குறிப்பு. "மங்கை தழுவக் குழைந்தார்....கண் - கொடுத்தார்"(3441) என்ற குறிப்பும் காண்க. "தட மார்பு நீங்காத் தைய லாளுல குய்ய வைத்த, காரி ரும் பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்ட முண்டாக"(ஓணகாந்தன்றளி - 6) என்று போற்றிய பெருமை காண்க. |
|
|