பாடிமிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவையுடன் நீடியகோ லங்காட்ட நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச் சூடியவஞ் சலியினராய்த் தொழுதுபுறம் போந்தன்பு கூடியமெய்த் தொண்டருடன் கும்பிட்டங் கினிதமர்வார். | 289 | (இ-ள்) பாடி...பணிவார்க்கு - முன் கூறியவாறு மிகக் களித்து மிகவும் பரவசப்பட்டுப் பணிவாராகிய நம்பிகளுக்கு; பாவையுடன்...காட்ட - அம்மையாருடன் கூடிய பழைமையாக நீண்ட திருக்கோலத்தை இறைவர் காட்டக் கண்டு; நிறைந்த....புறம்போந்து - நிறைந்த விருப்பத்துடனே வணங்கிச் சிரமேற் கூடிய அஞ்சலி செய்தாராகித் தொழுது திருக்கோயிலின் புறம்பேபோய்; அன்பு....இனிதமர்வார் - அன்பினாற் கூடிய மெய்யடியார்களுடனே கூடிக் கும்பிட்டுக் கொண்டு அப்பதியில் இனிதாக விரும்பி வீற்றிருப்பாராகிய நம்பிகள், (வி-ரை) பணிவார் - நம்பிகள்; வினைப் பெயர். பாவையுடன் நீடிய கோலம் - அம்மையப்பராய் உள்ள நித்தியமாகிய கோலம்; "தொன்மைக் கோலமே நோக்கி"(திருவா - கோத்). முன்பாட்டிற் கண்கொடுத்துக் காணக் காட்டியது முலைச்சுவட்டுக் கோலம்; அஃது ஒரு நிலையாகிய சிறப்புக் கோலம்; இஃது என்றும் எங்குமுள்ள பொதுக் கோலம்; "அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக, வம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர்"(களிறு - 2). அன்பு கூடிய - அன்பு பெருகிய; அன்பினால் வந்து கூடிய; அன்பினாற் பிணைக்கப்பட்ட என்ற குறிப்புமாம். மெய்த் தொண்டருடன் கும்பிட்டு - "அன்பரொடு மரீஇ "(போதம் - 12); இறை வழிபாட்டில் அன்பரொடு கூடியிருத்தல் பெரும் பயனும் சிறப்பும் தருவது. அமர்வார் - நம்பிகள்; வினைப்பெயர்; அமர்வார் - போற்றிப் - பரவி - அகல்வார்(ஆகி) - (3444) - எடுத்து - என்று பாடிப் - போய் - வழிக்கொள்கின்றார் - (3445) - சென்றிறைஞ்சிப் போந்து - அணைந்தார் (3446) என மேல் வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக்கொள்க. |
|
|