மாமலையாண் முலைச்சுவடும் வளைத்தழும்பு மணிந்தமதிப் பூமலிவார் சடையாரைப் போற்றியரு ளதுவாகத் தேமலர்வார் பொழிற்காஞ்சித் திருநகரங் கடந்தகல்வார் பாமலர்மா லைப்பதிகந் திருவாரூர் மேற்பரவி, | 290 | (இ-ள்) மாமலையாள்...போற்றி - பெரிய மலைவல்லியாராகிய காமாட்சி யம்மையாரது முலைச்சுவட்டையும் வளைகளின் தழும்பையும் தாங்கிய மதியும் கொன்றைப் பூக்களும் மலிந்த நீண்ட சடையாரைத் துதித்து; அருள் அதுவாக - அங்கு இறைவர் செய்யும் திருவருள் அவ்வளவேயாகியிட; தேமலர்...கடந்து - தேன் பொருந்திய மலர்களையுடைய நீண்ட சோலைகள் சூழ்ந்த காஞ்சித் திருநகரத்தினைக் கடந்து, பரமலர்....பரவி - பாட்டுக்களின் தன்மைகள் விரிந்து கிடக்கும் மாலையாகிய திருப்பதிகத்தினைத் திருவாரூரின் மேற் பாடித் துதித்து; அகல்வார் - அங்கு நின்றும் மேற் செல்வாராகி, (வி-ரை) மாமலையாள்...சடையாரைப்போற்றி - திரு ஏகம்பரைத் துதித்து; இப்பதிகங்கள் கிடைத்தில! அருள் அதுவாக - இறைவர் அங்குச் செய்த அருள் அதுவே - அம்மட்டே. அமைய; அது - அதுவே; ஏகாரம் பிரிநிலை தொக்கது; அது - இடக் கண் கொடுத்த அந்நிலை என்று முன்னறிசுட்டு; "அருளதுவாக" (3431) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; "அருள் இத்தனைகொலாம்" (3435) என்றதும் காண்க. திருவாரூர் - மேற்பதிகம் - பரவி அகல்வார் என்க. பரவி - பரவிக்கொண்டவாறே; அகல்வார் - பரவி - என்று வினையெச்சத்தினைப் பின்வைத்தார் அகல்வதாகிய செயலின் முன்னரே நினைதலும் பரவுதலுமாகிய செயல்கள் நிகழ்கின்ற விரைவினைப் புலப்படுத்தற்கு. மாமலர் மாலைப்பதிகம் - மேல் வரும் பாட்டிற் கூறப்படும் பதிகம். "சொன் மலர்கொண் டிட்டன"(10) என்ற பதிகத்திற் கேற்பப் பரமலர்மாலை என்றார். |
|
|