"அந்தியுநண் பகலு"மென வெடுத்தார்வத் துடனசைவால் "எந்தைபிரான் றிருவாரூ ரென்றுகொலெய் துவ"தென்று சந்தவிசை பாடிப்போய்த் தாங்கரிய வாதரவு வந்தணைய வன்பருடன் மகிழ்ந்துவழிக் கொள்கின்றார். | 291 | (இ-ள்) அந்தியும்...ஆர்வத்துடனசைவால் - அந்தியும் நண்பகலும் என்று தொடங்கி விருப்பத்தோடும்; எந்தைபிரான்....என்று - எமது பெருமானுடைய திருவாரூரினை என்றைக்குச் சென்று சேர்வேன் என்ற குறிப்புடனே; சந்த...போய் - சந்த நிறைந்த இசை பொருந்தப் பாடிச் சென்று; தாங்கரிய...வழிக்கொள்கின்றார் - தாங்குதற்கரிய பெருவிருப்பமாகிய பேரன்பு வந்து சேர்ந்தபடியால் அன்பர்களோடு மகிழ்ச்சியோடும் வழிச் செல்வாராகி, (வி-ரை) "அந்தியு நண்பகலும்" என எடுத்து -இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. எந்தை பிரான் றிருவாரூர் என்று கொலெய்துவது" என்று - இது பதிகக் கருத்தும் உட்குறிப்புமாம். "தென்றிருவாரூர் புக்கு எந்தை பிரானாரை என்று கொலெய்துவதே" என்று வரும் பதிக மகுடம் காண்க; எந்தை பிரானாரை - என்னுயிர்க்கின்னமுதை - இடுபலி கொள்ளியை - ஏழுலகாளியை - என் மணியை - எம்மிறையை - என்று பதிகத்துட் பலவாற்றானும் பன்னி ஆரூரில் இறைவரை எய்துவதென்று கொல்? என்றருளியிருப்பினும் பிரானது திருவாரூரினை எய்துவதென்பதே கருத்தாகக் காண்க என்று ஆசிரியர் காட்டியவாறு. என்னை? "தென் திருவாரூர் புக்கு" என்றும், "எல்லை மிதித்து" என்றும், "என்றன் மனங்குளிர", "எண்ணிய கண்குளிர" என்றும் வருவனவற்றாலும், இடப்பெயர்ச்சியால் ஆரூர் என்ற ஊரினை நீங்கி நின்ற அளவே யன்றி, ஆரூர்ப் பிரானாரை ஒரு போதும் மறந்து நீங்கினா ரல்லராகலானும், [மிக நினைந்து (3427) - ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்(3428) - "ஆரூரானை மறக்கலுமாமே" (பதிகம்).] தென் திருவாரூர் என்னும் ஊரினைச் சென்று எய்துவ தென்றுகொல் என்பதே பதிகக் கருத்தாம். இது பற்றியே "பதிகம் திருவாரூர் மேற் பரவி" (3444) என்றும், "திருவாரூர் என்று கொல் எய்துவது என்று" என்றும் அருளினார். நம்பிகளது இத்திருவுள்ளக் கருத்து "சடையான் மேவிய ஆரூரைப்....பன்னெடுஞ் சொன் மலர் கொண் டிட்டன பத்து"(10) என்ற திருக்கடைக் காப்பினில் விளங்குதலும் காண்க. சந்த இசை பாடி - இசை - பண்; இசை அமைந்த பதிகம்; இசை - இப்பதிகப் பண்ணாகிய புறநீர்மை; இப்பண்ணுக் குரிய நேரம் விடியற் காலமாம்; எனவே நம்பிகள் காஞ்சிபுரத்தினின்றும் திருவாரூரை நோக்கி வைகறை யாமத்தில் புறப்பட்டு வழிக்கொண்டருளினர் என்பது கருதப்படும்; தமது எஞ்சய இன்னலாகிய இருள் நீங்கும் காலம் என்ற குறிப்பும் தருவது. 1333-ம் பாட்டும் கருதுக. தாங்கரிய ஆதரவு - உள்ளடக்கிப் பொறுத்தற்கரிய பேரன்பு - ஆசை. அன்பருடன் - "தொண்டருடன்"(3443) என்றது காண்க. வழிக் கொள்ளுதல் - பயணப்பட்டு மேற்செல்லுதல். |
|
|