பாடல் எண் :3446

மன்னுதிருப் பதிகடொறும் வன்னியொடு கூவிளமுஞ்
சென்னிமிசை வைத்துவந்தார் கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.
292

(இ-ள்) மன்னு....இறைஞ்சி - வழியிடையில் பொருந்திய திருப்பதிகள் தோறும் வன்னியொடு வில்வத்தினையும் தலையின்மேற் சூடி மகிழ்ந்தாராகிய இறைவரது திருக்கோயில்களின்முன் சென்று வணங்கி; பன்னு தமிழ்....போந்து - பன்னிய தமிழ் மாலைகளைச் சாத்தித் துதித்துச் சென்று; அன்னமலி...திருஆமாத்தூர் - அன்னங்கள் மலிந்த வயல்களும் தடாகங்களும் சூழ்ந்த திருஆமாத்தூரினை; அணைந்தார் - சேர்ந்தருளினர்.
(வி-ரை) மன்னு திருப்பதிகள் தொறும் - காஞ்சிபுரத்தினின்றும் திருவாரூர் போகும் வழியில் பொருந்திய பதிகளில் எல்லாம்; இவை திருவில்வலம், திருக்குரங்கணின் முட்டம், புரிசை நாட்டுப் புரிசை, திருவெண்குன்றம், திண்டீச்சரம், திருப்புறவார் பனங்காட்டூர் முதலாயின என்பது கருதப்படும். இவை காஞ்சிபுரத்தினின்றும் நேர் தெற்குநோக்கிச் செல்லும் சாலைவழியில் உள்ளன; பெரும்பாலும் மட்சாலை வழியேயாம்; இவைகட்கு நம்பிகள் பதிகம் கிடைத்தில!; இவை பெரும்பான்மை வைப்புத்தலங்கள். தேவாரப் பாடல் பெற்ற பதிகளும் சில; நம்பிகள் பதிகங்களிலும் வைப்பாயுள்ளனவும் சில.
பன்னுதமிழ்த் தொடை சாத்தி - பதிகங்கள் பாடி; இவை சிதலரித் தொழிந்தனபோலும்!.