பாடல் எண் :3448

அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார் விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க் "கல்வா யகி"லென்னுந் தொடை சாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட ருடன்மகிழ்ந்து வைகினார்.
294

(இ-ள்) அந்நாட்டின்....எய்தி - அத்திரு நாட்டின் எல்லைக்குள் ஒரு பக்கத்தில் உள்ள திருநெல்வாயில் அரத்துறையினைச் சென்று சேர்ந்து; மின் ஆரும்...எழுந்து - ஒளிபொருந்திய படையாகிய மழுவை ஏந்திய இறைவரது மணமுடைய மலர் போன்ற பாதங்களை நிலமுறவீழ்ந்து வணங்கி எழுந்து; சொன்மாலை....சாத்தி - சொன்மலர் மாலையாகிய "கல்வா யகில்" என்று தொடங்கும் மாலையினைச் சாத்தி; மன் ஆர்வம்...வைகினார் - நிலைபெற்ற ஆர்வத்தினையுடைய திருத்தொண்டர்களோடும் மகிழ்ச்சி பொருந்தி எழுந்தருளி யிருந்தனர்.
(வி-ரை) அந்நாட்டின் மருங்கு - அந்நாளில் நடு நாடு, சோழ அரசமரபினராகிய பல்லவர்களுக் குட்பட்டிருந்தமையால், அந்நாடு என்பது சோழ நாட்டினையே குறிப்பதாம்; அகரம் - முன் நீர்நாடு என்று கூறிய அந்த என முன்னறிசுட்டு; மருங்கு - ஒரு புறமாக.
மருங்கு - சோழர்களுக்குட்பட்ட சிற்றரசர்களாகிய முனையதரையர் மரபினர்களால் ஆளப்பட்ட குறிப்பு. அரசாட்சி பற்றிய நடுநாடு என்ற பிரிவுபிற்காலத்தது.
சொன்மலர் மாலை என்க; மாலைத்(யாகிய) தொடை என்று கூட்டுக.
"கல்வாயகிலும்" பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
அந்நாளில் திரு ஆமாத்தூரினின்றும் விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டை - வழியே நேரே தென்மேற்காய் திருநெல்வாயிலரத்துறையினை அடைந்து, நிவாநதியைக் கடந்து செல்லும் பாதை ஒன்று வழக்கிலிருந்தது; ஆளுடைய அரசுகள் தில்லையினின்றும் மேற்கே திருநாரையூர் சென்று சீகாழிக்கு எழுந்தருளியதும், ஆளுடைய பிள்ளையார் திருநெல்வாயிலரத் துறையினின்றும் மீண்டு சோழநாட்டுப் பதிகளைக் கும்பிட்டுத் திருநாரையூர் - திருக்கருப்பறியலூர் வழியே போந்து சீகாழிக்கு எழுந்தருளியதும், ஆகிய வழிகளை ஈண்டுக் கருதுக.
குறிப்பு : - நம்பிகள் திருஆமாத்தூரினின்றுப் திருவாரூருக்கு எழுந்தருளும் நிலையில் திருநெல்வாயிலரத்துறை, திருவாவடுதுறை, திருத்துருத்தி இவற்றை வழிபட்டுப் போந்தருளினர் என்ற சரிதப் பகுதிக்கு" எற்றே யொருகண் ணிலன்; நின்னையல்லால் நெல்வாயி லரத்துறை நின்மலனே, மற்றேலொரு பற்றிலன்" என்றும், "கண்ணி லேனுடம் பில்வடு நோயாற் கருத்த ழிந்துனக் கேபொறையானேன்....திருவாவடுதுறையுள், அண்ண லேயெனை யஞ்சலென் றருளா யாரெனக்குற வமராக ளேறே" என்றும், "என்னை நான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி யிடர்கெடுத் தானை" (திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்) என்றும் வரும் அவரது திருவாக்குக்கள் பெரிய அகச்சான்றுகளாய் விளங்குகின்றன; நம்பிகள் ஒரு கண்ணின்றி இப்பதிகளை வழிபட்டனர் என்பது இவற்றுள் விளங்கும்.