பரமர்திரு வரத்துறையைப் பணிந்துபோய்ப் பலபதிகள் விரவிமழ விடையுயர்த்தார் விரைமலர்த்தா டொழுதேத்தி உரவுநீர்த் தடம்பொன்னி யடைந்தன்ப ருடனாடி அரவணிந்தா ரமர்ந்ததிரு வாவடுதண் டுறையணைந்தார். | 295 | (இ-ள்) பரமர்....போய் - இறைவரது திருவரத்துறையினைப் பணிந்து மேற்சென்று; பலபதிகள்...தெழுதேத்தி - பதிகள் பலவற்றிலும் சேர்ந்து இளைய இடபக் கொடியினை உயர்த்திய இறைவரது மணமுடைய மலர் போன்ற திருவடிகளைப் பணிந்து துதித்து; உரவு...ஆடி - பரந்த நீரையுடைய பெரிய காவிரியினைச் சேர்ந்து அன்பர்களுடனே நீராடி; அரவணிந்தார்....அணைந்தார் - பாம்பினை அணிந்த இறைவர் விரும்பி எழுந்தருளிய தண்ணிய திருவாவடுதுறையினை அணைந்தனர். (வி-ரை) பலபதிகள் விரவி....ஏத்தி - திருநெல்வாயிலரத் துறையினின்றும் நம்பிகள் திருஎருக்கத்தம்புலியூரின் அணிமையில் நிவாநதியைக் கடந்து அங்கு நின்றும் நேர் தெற்கே செயங்கொண்ட சோழபுரம் வழியாகச் செல்லும் பாதை வழியே சென்று, திருஆப்பாடியின் அணிமையில் கொள்ளிடத்தைக் கடந்து காவிரியை அடைந்தனர் என்பது கருதப்படும்; இவ்வாறன்றித் திருநெல்வாயிலரத்துறையினின்றும் நிவாவின் வடகரை வழியே போந்து கூடலையாற்றூரின்அணிமையில் நிவாநதியினைக் கடந்து நேர் தெற்குப்பாதை வழியே கொள்ளிடங்கடந்து காவிரியைக் கஞ்சனூர், கோடிகா இவற்றின் அருகில் அணைந்தனர் என்றலும் பொருந்தும். முன்னர்க் கூறியபாதையில் இடையில் உள்ள பதிகள் கோவந்தபுத்தூர், விசயமங்கை, கொட்டையூர், குடமூக்கு முதலாயின; பின்னர்க்கூறிய பாதையில் இடைப்பட்டன திருப்பனந்தாள், திருமங்கலக்குடி, கஞ்சனூர் முதலாயின; காவிரி கடந்தவுடன் திருவாவடுதுறையினை அணைந்தனர் என்கின்றாராதலின் பின் கூறிய பாதை வழியே போந்தமை வலியுறுத்தப்படும். உரவு நீர் - பரந்தோடுகின்ற நீரினை உடைய. அன்பருடன் ஆடி - தொடர்ந்து வந்த அன்பர்களுடனே காவிரியிற் குளித்து; அன்பருடன் என்பது அணைந்தோர் தன்மை; இதனை விடாது எங்கும் கூறுதல் குறிக்க. தண் ஆவடு துறை - என்க. தண்மை பிறவி வெப்பந் தீர்க்கும் தன்மை. |
|
|