பாடல் எண் :3450

அங்கணைவார் தமையடியா ரெதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து
"கங்கைவாழ் சடையாயோர் கண்ணிலே"னெனக்கவல்வார்
"இங்கெனக்கா ருற"வென்னுந் திருப்பதிக மெடுத்திசைத்தார்.
296

(இ-ள்) அங்கணைவார்....புக்கருளி - அங்குத் திருவாவடு துறையினில் அணைவாராகிய நம்பிகளை அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்கப் பதியினுள்ளே புகுந்தருளி; பொங்கு...உள் அணைந்து - சைவமெய்த் திருப் பொங்கும் திருக்கோயிலினைப் புடைவலங் கொண்டு சுற்றிவந்து உள்ளே சென்று திருமுன்பு சேர்ந்து; கங்கை...கவல்வார் - கங்கைநதி வாழ்கின்ற சடையினை உடையவரே! ஒரு கண்ணில்லேன் என்று கூறிக் கவல்கின்றாராகி; இங்கெனக்கார் உறவு...இசைத்தார் - இங்கு எனக்கு யார் உறவு? என்ற கருத்தினை உடைய திருப்பதிகத்தினைத் தொடங்கிப் பாடியருளினர்.
(வி-ரை) திருப்பொங்கு கோயில் - என்க; திரு - சைவமெய்த் திரு. திருப்பொங்குதலாவது திருமூலதேவ நாயனார் 3000 ஆண்டுகள் அரசின் கீழே, சிவயோகத்தமர்ந்திருந்து திருமந்திரத்தினைப் பிறவி விடந் தீர்ந் துலகத்தோருய்ய அருளியதும், கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரமும் உலவாக்கிழியாய் இறைவர் அளித்துச் சிவவேள்விகளைப் பெருகச் செய்ததும், பின்னர்த் திருமாளிகைத் தேவர், நமசிவாய தேசிகர் முதலாகிய பெரியோர் மென்மேல் வந்தருள வுள்ளதுமாகிய சிறப்புக்கள். பரமகுருநாதர்கள் வழிவழி வந்து சிவத்துவத்தை உலகில் விளங்கச் செய்தல்.
புடைவலங் கொள்ளுதல் - திருமதிலின் உட்பக்கத்தே பொன் மாளிகையினை வலமாகச் சுற்றி வருதல்.
உள் அணைந்து - இறைவர் திருமுன்பு சார்ந்து.
கங்கை வாழ் சடையாய்! - இது பதிகத் தொடக்கம்; ஓர் கண்ணிலேன் - பதிகத்தின் உட்குறிப்பு. பதிகம் 2வது பாட்டுப் பார்க.
"இங்கெனக்கு ஓர் உறவு" - என்னும் - இது பதிகக் குறிப்பாகிய முறையீடு; "ஆர் எனக்குறவு அமரர்களேறே" என்பது பதிக மகுடம்; நம்பிகளது திருவாவடுதுறைப் பதிகங்களிரண்டும் தக்கேசிப் பண்ணில் அமைந்தன. அவற்றுள் "மறையவன்" என்று தொடங்கும் பதிகம் முன்முறை வந்து வழிபட்டபோதுஅருளப்பட்டது; இம்முறை அருளியது "கங்கை வாழ் சடையாய்" என்ற இத்திருப்பதிகம்: மிகவும் மனமுருக்கும் தன்மை வாய்ந்தது.