பாடல் எண் :3452

பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு வருள்புரிவார்
"விரவியவிப் பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளி"
யென்னக்
கரவிறிருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார்.
298

(இ-ள்) பரவியே...புரிவார் - துதித்து வணங்கிய நம்பிகளுக்கு இறைவர் திருவருள் புரிவாராய்; விரவிய...என்ன - பொருந்திய இப்பிணி முழுதும் தீர்வதற்குத் தனியாக நன்மையுடைய மலர்களில் வண்டுகள் பாடும் தீர்த்தத்தினையுடைய வடகுளத்திற் குளிப்பாயாக என்று அருளிச் செய்ய; கரவில்...புறப்பட்டார் - கரவில்லாத திருத்தொண்டராகிய நம்பிகள் கைகூப்பி வணங்கி புறப்பட்டருளினர்.
(வி-ரை) "விரவிய இப்பிணி...குளி" - இஃது இறைவர் நம்பிகளுக்கு அருளிய ஆணை; விரவிய இப்பிணி - இடையே வந்த புதிய பிணி.
வேறாக - இதற்கென்று தனியாக; வேறாகக் குளித்தலாவது நித்த நியமத்தின் பொருட்டும், ஆலய சேவையின் பொருட்டும், குளித்து வந்த நியமங்களின் வேறாகப் பிணி நீங்க என்றெண்ணிக் குளித்தலாம்.
வடகுளம் - திருக்கோயிலினுள் இறைவரது திருமாளிகையின் வடபுறத்துத் திருமுற்றத்தில் உள்ளது; இதன் கரையில் நம்பிகளது ஆலயம் தனியாக உள்ளது; நம்பிகளின் திருவுருவம் ஒரு கண் பார்வையுடன் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியுள்ளநிலை மனத்தை உருக்கும் அற்புதத் திருக்கோலமாம்; கண்டு வழிபடத் தக்க பெருமை வாய்ந்தது; நோய் நீங்கத்தின் பொருட்டும், பிறவுமாக இன்றும் பல அன்பர்கள் இங்கு வழிபட்டு இக்குளத்தில் நியமமாக மூழ்கி வரம் பெறுகின்றார்கள்; வர...தீர்த்தம் என்ற குறிப்புமிது; வரமலர் - தாமரை; மலர் (279); தீர்த்தம் - தூய்மை; அதனைச் செய்யும் நீருக்கு வந்தது; ஆகுபெயர்; "ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடும் தீர்த்தன்" (திருவா).
கரவில் திருத்தொண்டர் - கரவாவது வஞ்சனை முதலிய மனக் குற்றங்கள்; "கரவாடும் வஞ்னெஞ்சர்க் கரியானை" (தேவா).
புறப்பட்டார் - இவ்வரம் பெற்ற இடமாகிய இறைவர் திருமுன்பினின்றும் வடகுளத்தினைச் சார்தற்கு எழுந்தருளினார்.
குறிப்பு : - பிணி வருத்தம் ஒழித்தருள வேண்டும் என்று பரவிய பதிகம் கிடைத்திலது!இப்போது உள்ள "மின்னுமா மேகங்கள்" என்ற பதிகம் வட குளத்திற் குளித்து நோய் நீங்கி "அக்கணமே மணியொளி சேர் திருமேனி யாயின" (3453) பின் மகிழ்ந்து போற்றியது.