மிக்கபுனற் றீர்த்தத்தின் முன்னணைந்து வேதமெலாந் தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது புக்கதனின் முழுகுதலும் புதியபிணி யதுநீங்கி அக்கணமே மணியொளிசேர் திருமேனி யாயினார். | 299 | (இ-ள்) மிக்க...அணைந்து - மிகுந்த நீரினையுடைய வடகுளமாகிய அத்தீர்த்தத்தின் முன் சென்று சார்ந்து; வேதமெலாம்....தொழுது - வேதங்கள் எல்லாம் கூடிய வடிவமேயாயிருந்த திருத்துருத்தி யிறைவரைத்தொழுது; புக்கதனில்...நீங்கி - அத்தீர்த்தத்தினுள்ளே புகுந்து முழுகினவுடன் புதிய பிணி நீங்கி; அக்கணமே...ஆயினார் - அந்தக் கணத்திலேயே மணியின் ஒளி பொருந்திய திருமேனியாக ஆயினார். (வி-ரை) மிக்க புனல் தீர்த்தத்தின்முன் - மிக்க - இறைவரது அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகி அகமும் புறமுந் தூய்மை செய்யும் அருட்டன்மை மிகப்பெற்ற என்ற குறிப்பு. தீர்த்தம் - தூய்மை என்பது அதனையுடைய நீருக்கு ஆகி, மேலும் அந்நீர் நிற்கும் குளத்துக்காகி வந்தது; இருமடியாகு பெயர்; விளக்கிருக்கும் இடத்தையும் விளக்கென்றாற் போல. வேத மெலாம் தொக்க வடிவாயிருந்த - வேதங்களிற் கூறப்படும் இறைமைத் தன்மைகள் யாவும் ஒருங்கே தொகுதியாய்க் கூடி விளங்க வெளிப்பட்டுக் காணவீற்றிருக்கும் இறைவர். துருத்தியார்தமைத் தொழுது - அதனிற் புக்கு முழுகுதலும் - நீராடும்போது இறைவரைத் தொழுது துதித்து மூழ்குதல் வேண்டுமென்பது விதி; "உடையான் பொற்பாத, மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்" "பாதத் திறம் பாடி யாடேலோ ரெம்பாவாய்" "வித்தகர்தாள், - வாயார நாம்பாடி, ஏருருவப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்" "நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப், பங்கயப் பூம் புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்" என்பன முதலாக வரும் (திருவெம்) திருவாசகக் கருத்துக்கள் காண்க. இங்கு, அதன் மேலும், இறைவரது ஆணைவழிக் குளிக்கின்றாராதலின் அவரை நினைந்து தொழுதல் சிறப்பு விதியுமாம். "கங்கை யாடிலென் காவிரி யாடிலென்...எங்குமீச னெனாதவர்க் கில்லையே" "கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை, ஆடினாலும் அரனுக்கன் பில்லையேல், ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி, மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே" (அரசுகள் - பாவநாசத் திருக்குறுந்தொகை) என்ற திருவாக்குக்கள் கண்டு நினைவு கூர்தற்பாலன. இறைவரது அருளே இந்நீரினுக்கு இத்தன்மை தந்ததாம் என்ற உணர்வுடன் போற்றிக் குளித்தல் வேண்டுமென்பது ஆணை. புதியபிணி - முன் இல்லாது இடையில் நேர்ந்த பிணி. இது வெப்புக் காரணமாக நம்பிகளது உடலைப்பற்றிய நோய் என்பது கர்ணபரம்பரை. அக்கணமே....ஆயினார் - அக்கணமே - முழுகிய அப்பொழுதே; "உற்றநோய் இற்றையே யறவொழித் தானை" பதிகம்(5); மணி ஒளிசேர் திருமேனி - மணி - செம்மணி; மணியின் ஒளி அதனின்றும் பிரிக்கப் படாத இயல்பின் உள்ளது போல் இங்கு நம்பிகளது திருமேனியிற் பெற்ற ஒளியும் அவரது திருமேனியின் இயல்பாகிய முன்னை ஒளி என்பது குறிப்பு; "கண்களெண் ணிலாத வேண்டுங் காளையைக் காண"(171) என்பது முதலியவை காண்க; அழகராகிய இறைவரது திருமேனியழகு வாய்க்கப் பெற்ற தன்மையால் சுந்தரர் என்ற திருநாம முடைமையும், சிறுவயதில் தெருவிற் சிறுதேருருட்டும் பொழுது நரசிங்க முனையர் என்னும் நாடுவா ழரசர் கண்டு பரவருங் காதல் கூர்ந்தமையும், "அங்க ணோரொளி யாயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்றுமுன் றோன்றிட", "வென்ற பேரொளியார்" என்ற தன்மைகளும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன; சேர் - முழுகுதலினால் முன்னிலைமை வரப்பெற்ற; திருமேனி ஆயினார் - ஆக்கச்சொல் முன்னை நிலைவந்தது என்ற பொருளடைந்து நின்றது. நீங்க - என்பதும் பாடம். |
|
|