பாடல் எண் :3455

பண்ணிறைந்த தமிழ்பாடிப் பரமர்திரு வருண்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன் பணிந்தங்க ணுறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவு முடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர் முன்றோன்றக் காண்கின்றார்;
301

(இ-ள்) பண் நிறைந்த....மறவாது - பண்பொருந்திய தமிழாகிய அத்திருப்பதிகத்தினைப் பாடி இறைவர் செய்த பேரருளினை மறவாமல்; எண் நிறைந்த...உறைந்து - எண் நிறைந்த திருத் தொண்டர்களுடனே கூடி இறைவரை வணங்கி, அத்திருப்பதியில் தங்கி யிருந்து; ஏகி - புறப்பட்டு மேற் சென்று; உள் நிறைந்த...போய் - நினைவில் எப்போதும் நிறைவிற் கொண்ட இறைவரது பிறபதிகளிலும் இறைவரது திருவடிகளை வணங்கிப் போய்; கண்ணிறைந்த...காண்கின்றார் - கண்ணாரக்காணும் காட்சி நிறைந்த திருவாரூர் தம் எதிரே தோன்றக் காண்கின்றாராகி;
(வி-ரை) பண் நிறைந்த தமிழ்பாடி - தமிழ் - முன்கூறிய (3454) மின்னுமா மேகங்கள் என்ற திருப்பதிகம்; பண் - பதிகப்பண்ணாகிய காந்தாரப் பண்.
திரு அருள் மறவாது - "என்னை நான் மறக்குமாறு" என்று பாடியருளியபடியே மறவாமல்.
எண்ணிறைந்த - எண்ணத்தில் சிவனை நிறைவு கொண்ட; நிறைதல் - வேறொன்றற்கு மிடமில்லாது பொருந்துதல்; சிவனையே எப்போதும் நினைவிற் கொண்ட என்பதாம்; நம்பிகளது எண்ணத்தில் குடி கொண்ட என்றலுமாம்; "அடியவர்க் கடியவன் றொழுவ னாரூரன்"(10) என்ற பதிகக் குறிப்பு.
தொண்டருடன் பணிந்து - வடகுளத்திற் குளித்துப் புதிய பிணி நீங்கிக் கோயிலினை அடைந்து இறைவரது திருமுன்பு செல்லாது அங்குக் கூடியிருந்த தொண்டர்களெதிரே பதிகம் பாடியருளினமையால் (3454), அங்குநின்றும் அத்திருத் தொண்டர்களுடன் கூடி இறைவர் திருமுன்பு சென்று பணிந்து என்க. தொண்டரெதிர் எடுத்திசைத்தல் இறைவரது ஒப்பற்ற அருளினைப் பாராட்டி அடியவர்கள்பால் எடுத்துச் சொல்லி அவர்களுடன் கூடியனுபவித்தல்; இதனால் அவர்களுக்குத் திருவருளினை அறிவித்தலுடன் தமது மகிழ்ச்சி அன்பர்களுடன் கூடி எண்ணியபடியால் பெருக நிகழும் பயனும் உளதாகும்.
தொண்டர்கள் - நம்பிகளுடன் போந்தவர்கள்; வட குளத்துக் குளி என்று பரமர் திருவருள் பெற்றபடி நம்பிகள் குளிக்கச் சென்றபோது இத்திருத் தொண்டர்கள் அவர் குளித்து வருமளவும் கோயிலின்கண் தங்கினர்,. குளிக்கும்போதும் உடன்செல்லல் மரபன்றாதலின்; குளித்து வந்தபோது கண்ட நிலையினாலே திருமேனி பிணி நீங்கிய நிலை தொண்டர்கள் அறியவாராது; ஆதலின் நீங்கள் காணும் இவ்வாறு இடர் கெடுத்தானை நான் மறக்குமா றென்னை? என்று திருவருளினைப் பாராட்டும் வகையாற் றிருப்பதிகம் அருளிய குறிப்பும் காண்க.
உள் நிறைந்த - எப்போதும் தமது உள்ளத்திற் கொண்டிருந்த; "இன்னும் பல்லாறுல கினினம்புகழ் பாடென்றுறு பரிவின்...அருள் செய்தான்" (222) என்றபடி தடுத்து ஆட்கொள்ளப் பெற்ற அன்றே இறைவரது ஆணை பெற்றாராதலின் அன்று முதலாக இறைவரது பதிகளை நினைந்து நினைந்து சென்று சென்று வணங்குதலே நியமமாக எண்ணத்தில் கொண்ட என்பதாம்; பிறவும் - பிறவற்றின்கண்ணும்; ஏழனுருபு தொக்கது.
கண்ணிறைந்த - கண்டகண் மீளாதபடி தெவிட்டாத காட்சியின் அழகு நிறைந்த; "அணியாரூர்" "குளிராரூர்" "விழவாரூர்" "வளராரூர்" "தண்ணாரூர்" என்று அரசுகள் போற்றும் திறம் கருதுக. "சோலையாரூரானை" "பழனத் திரு அணியாரூரானை" "தாமரைப் பொய்கையாரூரானை" என்று பலவாறும் மனத்தின்கண் நிறையக் கண்டுகொண்டு நம்பிகள் திளைத்திருந்த என்றலுமாம்.
காண்கின்றார் - காண்கின்றாராகி; முற்றெச்சம். காண்கின்றார் - இன்புறார் - நின்று இறைஞ்சிப் புகுந்து - அணைந்தார் என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
உறைந்தேத்தி - என்பதும் பாடம்.