பாடல் எண் :3456

அன்றுதிரு நோக்கொன்றா லாரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்றொண்டர் திருவாரூர் மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார் தமைமுன்னந் தொழுவணைந்தார்.
302

(இ-ள்) அன்று...இன்புறார் - அன்று தமது ஒரு திருக்கண்ணினால் நிறையக் கண்டும் இன்பம் முற்றப் பெறாதவராய்; வன்றொண்டர் - வன்றொண்டராகிய நம்பிகள்; நின்று...இறைஞ்சி - ஊரினைக் கண்ட அவ்விடத்தே நின்று நிலத்தின்மேல் விழுந்து எழுந்து பெருமூச் செறிந்து நேரே வணங்கி; திருவாரூர்...புகுந்து - பொழுது மயங்கும் மாலைப் போதினில் திருவாரூரினுள்ளே புகுந்து; துன்றுநடை...அணைந்தார் - நெருங்கிய சடையினையுடைய தூவாயாராகிய இறைவரை முன்னே தொழுவதற்கு அணைந்தருளினர்.
(வி-ரை) திருநோக்கு ஒன்றால் - காஞ்சியில் மீளப்பெற்ற ஒரு கண் (இடக்கண்) பார்வையினால்.
ஆரக்கண்டும் - என்று உம்மை விரிக்க; இன்புறார் - ஆர்வம் நிறையப் பெறாராகி; இங்கு இன்புற்றார் - என்று பாடங்கொள்வாருமுண்டு; பின்னர் "வாழ்ந்த மலர்க் கண்ணொன்றா லாராமன் மனமழிவார்" (3461) என்றும், "கண்களாற் பருகுதற்கு; மருவார்வத் துடன்மற்றைக் கண்தாரீர் எனவணங்கி" (3462) என்றும் வருவனவாற்றால் அப்பாடத்தின் பொருத்தம் ஆராயத்தக்கது.
நின்று - மேலடி எடுத்துச் செல்லுதலை நிறுத்தி நின்று.
நிலமிசை வீழ்ந்து - தலத்தினைக் கண்ட இடத்தே நிலமுற விழுந்து வணங்குதல் முறை; இங்கு அவசமானாரபோல விழுந்து என்ற குறிப்புமாம்.
நெடிதுயிர்த்தல் - பெருமூச்செறிதல்; இஃது ஆற்றாமையுடன் கூடிய வருத்தத்தால் நிகழ்வது; முன் எல்லாம் இரண்டு கண்ணுடன் கண்டவர் இப்போது ஒரு கண்ணால் பார்க்க மன மாற்றாத வருத்தத்தால் நெடிதுயிர்த்தார்.
நேர் இறைஞ்சி - எழுந்து நேர் நின்று வணங்கி; நகரை நேர் நோக்கி என்றலுமாம்.
மயங்கு மாலை - சூரியன் அத்தமனமான பின், ஒளி மங்கி இருள் புகுதும் அந்தி வேளை; கண் மயங்கும் நேரம்; காட்டுமொளி குறைதலாற் கண்பார்வை மயங்கும் கண்ணின் மயக்கத்தை அது உளதாகும் நேரத்தின் மேலேற்றிக் கூறியபடி. இவ்வாறன்றி, மயங்குதல் - கலத்தல் என்று கொண்டு (இரவும் பகலும்) மயங்கின மாலைக்காலம் என்பாருமுண்டு.
தூவாயார் - பரவையுண் மண்டளித் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவர் பெயர்; தூ - உண்ணுகின்ற; வாயார் - வாயினை உடையவர்; ஊழிப்பெரு வெள்ளம் திருவாரூர்மேற் பரவி மூழ்குவிக்காமை அவ்வெள்ளத்தினை உண்பவர் என்ற காரணம் பற்றி வந்த பெயர் என்பது வரலாறு.
பரவையுண் மண்டளி - என்ற பெயர்ப் (பரவை - கடல்; உண் - பெருகி வாராமல் உண்கின்ற) பொருளும் காண்க. "தூவாயா!" என்ற இப்பதிகத் தொடக்கம் காண்க; அக்குறிப்புப்பட இப்பெயராற் கூறினார்; இதனையே "தூவாயா" என்றெடுத்தே (3557) என மேற் கூறுதலும் காண்க. தலவிசேடம் பார்க்க.
முன்னம் - திருமூலட்டானத்தில் சென்று தொழுவதன் முன்னம்.
குறிப்பு - திருவாரூரினுள் மயங்குமாலையிற் புகுதலும், துவாயாரை முன்னந் தொழுது பாடுதலும், அங்கு வேறிருந்து பின்னர்த் திருமூலத்தானத்துள் இடைதெரிந்து திரு அத்தயாமத்து இறைஞ்ச அணைவதும் ஆகிய இந்நிலைகள், நம்பிகள் திருவாரூருள்ளும் திருக்கோயிலுள்ளும் பிரானார் திருமுன்பும் அடியார்கள் திருமுன்பும் ஒரு கண்ணில்லாத அந்நிலையிற் சென்று காணவும் காணப்படவும் மனம் ஒருப்படாது வருந்திய தன்மை குறிப்பன.
தூவாயார் - என்பதற்கு முன் உரைத்தவாறன்றித், தூ ஆயார் - பற்றுக் கோடாயினவர்; தூ - பற்றுக் கோடாதலை; "மனந்தூய்மை செய்வினை தூய்மையிரண்டு, மினந்தூய்மை தூவா வரும்" என்ற திருக்குறளானுணர்க; தூய்மையுடைய வேத சிவாகம வாக்கியராகலின் தூவாயா ரென்றலுமொன்று என்றுரைத்தனர் இராமலிங்கத் தம்பிரானார்.