பொங்குதிருத் தொண்டருட னுள்ளணைந்து புக்கிறைஞ்சித் துங்கவிசைத் திருப்பதிகந் "தூவாயா!" வென்றெடுத்தே "இங்கெமது துயர்களைந்து கண்காணக் காட்டா"யென் றங்கணர்தம் முன்னின்று பாடியருந் தமிழ்புனைந்தார். | 303 | (இ-ள்) பொங்கு....இறைஞ்சி - பெருகும் திருத் தொண்டர்களுடனே கூடிக் கோயிலின் உள்ளே சேர்ந்து திருமுன்பு புகுந்து வணங்கி; துங்க...எடுத்தேபெருமையுடைய இசையோடும் கூடிய திருப்பதிகத்தினைத் "தூவாயா!" என்று தொடங்கி; இங்கு...என்று - இங்கே எம்முடைய துன்பத்தினைப் போக்கிக் கண்காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்ற கருத்துடன்; அங்கணர் தம்...புனைந்தார் - இறைவர் திருமுன்பு நின்று பாடி அரிய தமிழ்ப் பதிகமாகிய மாலையினைப் புனைந்தருளினர். (வி-ரை) துங்க இசை - துங்கம் - உயர்ச்சி; பதிகப் பண்ணாகிய பண் பஞ்சமம். "தூவாயா!" - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு; உண்ணுகின்ற வாயினையுடையவரே!; தூ - உண்ணுதல். எமது துக்கங்களைப் போக்குபவர் என்பதும் குறிப்பு. "இங்கெமது...காட்டாய்" என்று - பதிகக் கருத்தாகிய குறிப்பு; எமது - பதிகத்துள் தொண்டு செய்வார் - நல்லன சொல்லுவார் - ஆகமசீலர் - என்றிவ்வாறு அடியார்களைக் குறித்து வேண்டுதலின் எமது என்று பன்மையிற் கூறினார். அங்கணர் - அங்கண்மை - கண்ணோட்டம் - உடையவர்; அழகிய கண்ணுடையவர் என்றலுமாம். கண்பெறக் கேட்கின்றமையால் கண்ணுடையவரே கண் தரவல்லவர் என்ற குறிப்பும்பெற இத்தன்மை பற்றிக் கூறினார். தமிழ் - தமிழ்ப் பதிகமாகிய மாலை. |
|
|