ஆறணியுஞ் சடையாரைத் தொழுதுபுறம் போந்தங்கண் வேறிருந்து திருத்தொண்டர் விரவுவா ருடன்கூடி ஏறுயர்த்தார் திருமூலட் டானத்து ளிடைதெரிந்து மாறிறிரு வத்தயா மத்திறைஞ்ச வந்தணைந்தார். | 304 | (இ-ள்) ஆறணியும்....புறம்போந்து - கங்கையை முடித்த சடையினைஉடைய இறைவரைத் தொழுது புறத்திற் போந்து; அங்கண் வேறிருந்து - அங்கு வேறு மோர் தனியிடத் தெழுந்தருளித் தங்கியிருந்து; திருத்தொண்டர்....கூடி - தம்முடன் பொருந்த வருவார்களாகிய திருத்தொண்டர்களுடனே கூடி; ஏறுயர்த்தார்....வந்தணைந்தார் - இடபக் கொடியினை உயர்த்திய இறைவரது திருமூலத்தானத்தின் கண் ஏற்ற சமயம் அறிந்து ஒப்பற்ற திரு அத்தயாமக் கால வழிபாட்டின்போது சார்ந்து வணங்க வந்து அணைந்தருளினர். (வி-ரை) அங்கண் வேறிருந்து - அத்திருக் கோயிலின் பக்கத்தில் தனியிடத்தில் தங்கி. விரவுவார் திருத்தொண்டருடன் கூடி - தம்முடன் வந்தாரும் திருவாரூரில் வந்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுடனே. திருமூலட்டானத்துள் - பூங்கோயிலினுள் புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன்பு. இடைதெரிந்து - செல்லத் தக்க காலமறிந்து; திரு வத்தயாம வழிபாட்டு நேரம் தெரிந்து சென்றனர் என்பது; வழிபாட்டுக் காலமல்லாக் காலத்தில் செல்லலாகாது என்பது குறிப்பு; முன் 3456ன் கீழ் உரைத்த குறிப்புக்களும் இங்குப் பார்க்கத்தக்கன. மாறில் திருவத்தயாமம் - மாறின்மை - வேண்டிய வேண்டியாங்கு வரம் தரப்பெறும் தன்மையில் ஒப்புயர்வற்ற வழிபாட்டுக் காலம் திருவத்தயாம மாகும் என்னும் தன்மை. வந்து அணைந்தார் - பூங்கோயிலின் பக்கம் வந்து சார்ந்தனர்; உள்ளணைந்தமை மேற்கூறுவார். (3460). விரவ வவருடன் கூடி - என்பதும் பாடம். |
|
|