பாடல் எண் :3460

சீர்பெருகு திருத்தேவா சிரியனைமுன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே யுட்புகுந்து
தார்பெருகு பூங்கோயி றனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத லாலவனி மேல்வீழ்ந்தார்.
306

(இ-ள்) சீர்...இறைஞ்சி - சிறப்புப் பெருகுகின்ற திருத்தேவாசிரியன் என்னும் மண்டபத்தினை முன்னர்ச் சென்று வணங்கி; கார் விரவு....உட்புகுந்து - மேகந் தவழ்கின்ற திருக்கோபுரத்தினைக் கைகூப்பி வணங்கி உள்ளே புகுந்து; தார்பெருகு....அணைவார் - மாலைகள் மிக்கு விளங்குகின்ற பூங்கோயில் என்னும் திருமாளிகையினை வணங்கிச் சார்ந்து அணைவாராய்; ஆர்வமிகு...வீழ்ந்தார் - ஆசை பெருகுகின்ற பெரு விருப்பத்தினாலே நிலத்தின்மேல் வீழ்ந்தார்.
(வி-ரை) திருத்தேவாசிரியனை முன் சென்று இறைஞ்சி - "பூங்கோயிலிற் சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ், மூதெயிற்றிரு வாயின்முன் னாயது" (136) "தேவா சிரிய னெனுந்திருக் காவணம்" (137); திருமுன்றிலினுள் அணைந்தவுடன் முதலிற் காண உள்ளது தேவாசிரிய னாதலின் அதனை முன் இறைஞ்சினார்; அன்றியும் அடியார் கூட்டம் நிறைந்துள்ள இடமதுவே யாதலின் அடியார்களை முன் வணங்கிச் சல்லும் முறையாலும் முன் இறைஞ்சினார் என்க.
கார்விரவு கோபுரம் - இது தேவாசிரியனை வணங்கிச் சென்றவுடன் உள்ள சுவாமி கோயில் முதற் கோபுரம்; இது நம்பிகளுக்கு "எதிர்காணக் காட்டும்படி எதிர் தோன்றி நிற்க" (336) "தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்" என்று திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுத்தருளின இடம்.
பூங்கோயில் - புற்றிடங் கொண்டாரும் தியாகேசரும் எழுந்தருளியிருக்கும் திருமாளிகை.
பெருங் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் - காதல் தள்ள நிலமிசை வீழ்ந்தார்; தம்வச மிழந்தமையால் தம் செயலாக நிலம் பொருந்த வீழ்வதன்றி, உடல் கீழே விழும் நிலை என்றது குறிப்பு.
தேவாசிரியன்முன் - என்பதும் பாடம்.