பாடல் எண் :3461

வீழ்ந்தெழுந்து கைதொழுது முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றா லாராமன் மனவழிவார்
"ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின் றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக் கண்டார்" ரெனத்தாழ்ந்தார்.
307

(இ-ள்) வீழ்ந்தெழுந்து...விம்மியே - முன் கூறியவாறு வீழ்ந்தபின் (நம்பிகள்) எழுந்து கை கூப்பித் தொழுது திருமுன்பு நின்று விம்மி விம்மி; வாழ்ந்த...மனமழிவார் - வாழ்வு பெற்ற மலர் போன்ற கண் ஒன்றினாற் கண்டு நிறைவு பெறாமல் மனமழிவாராகி; ஆழ்ந்த...தாழ்ந்தார் - மிக ஆழமாகிய துன்பக் கடலினின்றும் அடியேனை மேலே எழுந்தருள் செய்து விரும்பிய கருத்தை நிறைவாக்குவித்துக் கண்கொடுத்தருளுவீர் எனத் தாழ்ந்து வணங்கினர்.
(வி-ரை) வீழ்ந்து - முன் பாட்டிற் கூறியவாறு நிலமிசை விழுந்ததன் பின்னர்.
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் - திருவொற்றியூரில் இழந்த கண்களிரண்டனுள் முலைச்சுவட்டுக் கோலமுடைய திருவேகம்பரை "காணக் கண்ணடியேன் பெற்றவாறே" என்றபடி இறைவரது திருக்கோலம் காணும் வாழ்வு பெறும் பொருட்டே அவ்வொரு கண் பெற்றமையால் அதனை வாழ்ந்த மலர்க்கண் என்றார்.
கண் ஒன்று - இடது கண்; கண் ஒன்றால் - ஒரு கண்ணாற் கண்ட காட்சி.
ஆராமல் - ஆர்த்திபெறாமல்; ஆர்தல் - நிறைவு - அமைதி; மனமழிதல் - மனம் உருகி நைதல்.
ஆழ்ந்த...எடுத்தருளி - ஆழ்ந்த - நிலைகாணாதவாறு மிக ஆழமுடைய; நான் அழுந்திய என்றலுமாம்; கடல் - உருவகம்; கடல் என்றதற் கேற்ப எடுத்து என்றார். "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து"(சித்தி) என்றாற்போல.
தாழ்ந்த கருத்தினை நிரப்பி - தாழ்தல் - விரும்புதல்; சபதம் பிழைத்த பெரும் பிழையினையும் பொறுத்தருள வேண்டுதலின் தாழ்வாகிய என்ற குறிப்புமாம்; இப்பொருளில் தாழ்ந்த (தாழ்வாகிய) கருத்தாயினும் அதனை என்று இழிவு சிறப்பும்மை விரிக்க. கருத்தாவது யாது? எனில் கண்தாரும் என்ற இதுவேயாம் என்றபடி.
தாழ்ந்தார் - தாழ்ந்து வணங்கினார்.