திருநாவ லூர்மன்னர் திருவாரூர் வீற்றிருந்த பெருமானைத் திருமூலட் டானஞ்சேர் பிஞ்ஞகனைப் பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு மருவார்வத் துடன்"மற்றைக் கண்டாரீ" ரெனவணங்கி, | 308 | (இ-ள்) திருநாவலுர் மன்னர் - திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள்; திருவாரூர்....இன்னமுதத்தை - திருவாரூரில் வீற்றிருந்த பெருமானைத் திருமூலட்டானத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகராகிய இறைவரை வாயினாற் பருகலாகாத இனிய அமுதம் போன்றவரை; கண்களாற் பருகுதற்கு - கண்களினாற் கண்டு அனுபவித்தற் பொருட்டு; மருவார்வத்துடன்....வணங்கி - பொருந்திய பேரன்பினோடும் "மற்றைக் கண் தாரீர்" என்ற கருத்துடன் வணங்கி; (வி-ரை) பெருமானை - பிஞ்ஞகனை - அமுதத்தை - இவ்வாறு மூன்று திறத்தாற் கூறும் கருத்துப் பற்றி முன் (3434)லும், பிறாண்டும் உரைத்தவை பார்க்க. பருகா இன் அமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு - இது முன் "பருகுமாறும்" என்ற பதிகப் பகுதிக்கு உரைவகுத்துக் காட்டியபடி; ஆண்டுரைத்தவை பார்க்க. மருவு ஆர்வம் - கண்ணொன்றாற் கண்டு ஆராத ஆர்வம். மற்றைக் கண் தாரீர் - மற்றைக் கண்ணாவது காஞ்சிபுரத்தில் பெற்ற இடக்கண்ணன்றி ஏனைய வலக்கண் - இது நம்பிகளது திருவுள்ளக் குறிப்பு. மேற்பாட்டில் "தாளாதரிக்கும்...தரியீர்" என்பது பதிகக் குறிப்பு - (பதிகம் - 2). வீற்றிருக்கும் - என்பதும் பாடம். |
|
|