பாடல் எண் :3463

"மீளா வடிமை" யென்றெடுத்து மிக்க தேவர் குலமெல்லாம்
மாளா மேநஞ் சுண்டருளி மன்னி யிருந்த பெருமானைத்
"தாளா தரிக்கு மெய்யடியார் தமக்கா மிடர்நீர் தாயீ"ரென்
றாளாந் திருத்தோ ழமைத்திறத்தா லஞ்சொற் பதிகம் பாடினார்.
309

(இ-ள்) "மீளா அடிமை" என்றெடுத்து - மீளா அடிமை என்று தொடங்கி; மிக்க....பெருமானை - மிகுந்த தேவர் கூட்டமெல்லாம் இறந்து படாதபடி தாம் விடத்தினை உண்டு அருளிச் செய்து நிலைபெற்றிருந்த இறைவரை; தாள்....என்று - உமது திருவடியை அன்புடன் பேணும் உண்மை யடியார்களுக்கு ஆகும் துன்பங்களை நீர் தரிக்க மாட்டீரே என்ற குறிப்புடனே; ஆளாம்....பாடினார் - அடிமையும் திருத்தோழமையும் ஆகிய திறத்தோடு அழகிய சொற்றிருப்பதிகத்தினைப் பாடியருளினார்.
(வி-ரை) மீளா அடிமை - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
மிக்க...பெருமானை - இக்கருத்தே பட "விண்ணாள்வா ரமுதுண்ண மிக்க பெரு விடமுண்ட, கண்ணாளா" (3440) என்று முன்னர்க் காஞ்சிபுரத்தின் நிகழ்ச்சியிலும் கூறும் குறிப்புக் காண்க.
தாளாதரிக்கு மெய்யடியார் - "மீளா வடிமை யுமக்கே யாளாய்....ஆளாயிருக்கு மடியார்" என்ற பதிகத்தை விளக்கியவாறு. ஆதரித்தல் - இடையறாது பேணி அன்பு செய்தல்; மெய்யடியார் - மெய் - இயற்கை யடைமொழி.
மெய் அடியார் தமக்கு ஆம் இடர் - ஆம் - அடியார்கள் தமது வினை தீர்ந்து உய்தற் பொருட்டு நீர் நியதியின்படி ஊட்டுவிக்க அவ்வாறு அவர்பால் வரலாகும்; இடர் - இடரையும்; நீரே ஊட்டுவிப்பினும் அதனை அவர் அனுபவித்தற்கண் அவர்படும் துன்பத்தையும் என்று உம்மைவருவிக்க.
தரியீர் - தரிக்கமாட்டாத கருணையுள்ளவரே! என்று துதிக்கும்படி; பதிகம் பார்க்க.
ஆளாந் திருத்தோழமைத் திறத்தால் - ஆளாந் தன்மையும், அதனுடன் பொருந்தவுள்ள திருத்தோழராந் தன்மையும் இரண்டும் விரவிப் பொருந்துமவகையால்; "வாழ்ந்து போதீரே" "நீரே பழிப்பட்டீர்" என்பன முதலிய பதிகப் பாட்டுக்களின் தன்மையினை விளக்கி யருளியவாறு.