விழுந்து மெழுந்தும் பலமுறையான் மேவிப் பணிந்து மிகப்பரவி எழுந்த களிப்பி னாலாடிப் பாடி யின்ப வெள்ளத்தில் அழுந்தி யிரண்டு கண்ணாலு மம்பொற் புற்றி னிடையெழுந்த செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தினருளைப் பருகித் திளைக்கின்றார்; | 311 | (இ-ள்) விழுந்து...பரவி - நிலம் பொருந்த விழுந்தும் பின் எழுந்தும் பல முறைகளாலும் பொருந்திப் பணிந்து மிகவும் துதித்து; எழுந்த...அழுந்தி - மேன்மேல் அதிகரித்து எழுந்த மகிழ்ச்சியினாலே ஆடியும் பாடியும் இன்பப் பெருக்கில் மூழ்கியும்; இரண்டு....திளைக்கின்றார் - இரண்டு கண்களாலும் அழகிய பொற்புற்றினிடமாக முளைத்தெழுந்த செழிய குளிர்ந்த பவளம்போன்ற சிவக்கொழுந்தாகிய இறைவரது திருவருளைப் பருகி அனுபவத்தில் மூழ்கினவராகி, (வி-ரை) விழுந்து...அழுந்தி - கண்பெற்ற பெருமகிழ்ச்சியினால் நிகழும் அளவுபடாத மெய்ப்பாடுகள். பலமுறையான் - அட்டாங்க பஞ்சாங்க திரியாங்கமாகவும், அவையும் பலமுறையாகவும். பரவி - பாடி - பரவுதல் - துதித்தல்; பாடுதல் - கீதம் பதிகம் முதலியவை பாடுதல்; இன்பவெள்ளத்தில் அழுந்தி - இன்பத்தை நீர்ப்பெருக்காக உருவகித்தார்; அழுந்தி - என்றது நம்பிகளை அவ்வின்ப வெள்ளம் தன்னுள் அடக்கி மேலெழுந்தது என்ற குறிப்பாம். இரண்டு கண்ணாலும் - பருகித் திளைக்கின்றார் - முன் ஒரு கண்ணாற்கண்டு களித்தார்; ஆயின் அதனால் மனம் நிறைவு பெறவில்லை; இப்பொழுது மற்றக்கண்ணும் பெற்றதனால் இரண்டு கண்ணாலும் பருகினார் என்பதாம்; உம்மை முற்றும்மை; கண்களால் பருகினார் - பருகுதல் - வாயின்றொழில்; அதனை இங்குக் கண்ணின் றொழிலாக உபசரித்தார்; "பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு"(3462); திளைக்கின்றார் - திளைத்தல் - ஆனந்தானுபவத்தில் மூழ்குதல்; திளைக்கின்றாராய்; முற்றெச்சம்; திளைக்கின்றார் - ஏத்தி என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. எழுந்து களிப்பினால் - என்பதும் பாடம். |
|
|