கால நிரம்பத் தொழுதேத்திக் கனக மணிமா ளிகைக்கோயில் ஞால முய்ய வருநம்பி நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு மாலு மயனு முறையிருக்கும் வாயில் கழியப் புறம்போந்து சீல முடைய வன்பருடன் றேவா சிரியன் மருங்கணைந்தார். | 312 | (இ-ள்) காலம்....ஏத்தி - அந்த வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரை தொழுது துதித்து; ஞாலம்....நம்பி - உலக முய்யும் பொருட்டுத் திருவவதரித்த நம்பிகள்; கனக மணி மாளிகைக் கோயில் - பொன்மயமாகிய அழகிய அப்பூங்கோயிலின் திருமாளிகையினை; விருப்பால்....புறம் போந்து - விருப்பத்தினால் வலமாகச் சுற்றிவந்து விட்டுணுவும் பிரமனும் முறைகிடந்து காத்திருக்கும் திருவாயிலினைக் கடந்து புறத்திற் போந்து; சீலமுடைய...அணைந்தார் - தவவொழுக்க முடைய அன்பர்களுடனே தேவாசிரியனின் பக்கத்தே அணைந்தனர். (வி-ரை) காலம்நிரம்ப - மாறி றிருவத்தயாமத் திறைஞ்ச வந்தாராதலின் (3458) அந்த அத்தயாமமாகிய வழிபாட்டுக் காலம் முடிய; அத்தயாம முடியும்வரை ஏத்தியிருந்தனர்; அதன்பின் கோயில் திருக்காப்பிடப் பெறுமாதலின் வலங்கொண்டு புறம் போந்தனர் என்பதாம்; "அங்கெய்தாக் காலத்தின்" "காலமெல்லாந் துதித்திறைஞ்சி" என்பவையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. முறையிருத்தல் - முறையீடுகளை விண்ணப்பிக்கக் காலம்பார்த்துக் காத்திருத்தல். வாயில் - இது முதற்றிருவாயில்; நம்பிகளுக்கு இறைவர் வெளிப்பட்டுக் காட்சிதந்து திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுத்தருளிய இடம்; "கொடிநெடுங் கொற்றவாயில்"(336). இல்வாய் என்பது முன்பின்னாகத் தொக்கது. 6ம் வேற்றுமைத்தொகை; இலக்கணப் போலி. சீலமுடைய அன்பர் - நம்பிகளுடன் தொடர்ந்து வந்தோரும் திருவாரூரிற் கலந்த அன்பர்களும்; சீலம் சிவத்தவ ஒழுக்கத்திற் பிறழாமை. ஞாலமுய்யவரு நம்பி "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்" என்றது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
|
|