பாடல் எண் :3467

நங்கை பரவை யார்தம்மை நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கட் டனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதன் மீதூரப் புலர்வார் சிலநாள் போனதற்பின்,
313

(இ-ள்) நங்கை....போனதற்பின் - நங்கை பரவையார் தம்மை நம்பிகள் பிரிந்து போனபின்; தங்கு...தளர்வார்க்கு - தாம் தங்கும் அழகிய மாளிகையின் கண் தனிமை மிக்கதனால் தளர்பவருக்கு; கங்குல்...எல்லாம் - நாள்கள் முற்றும் இரவு பகலேயாகவும், பகல் இரவேயாகவும் ஆகிக் கழிய; பொங்கு...போனதற்பின் - மேன்மேல் அதிகரிக்கும் ஆசையானது மேலோங்க வருந்துவாராகி சிலநாட்கள் கழிந்த பின்னர்;
(வி-ரை) தனிமைகூர - தனித் திருத்தலால் வரும் - பிரிவினாலாகிய துன்பம் மிகுதிப்பட; தனிமை - அதனால்வரும் துன்பத்துக்காகி வந்தது.
கங்குல் பகலாய்ப் பகல் கங்குலாகிக் கழியா நாள் கங்குல் பகலாதல் - பிரிவாற்றாமையால் கண் துயில்பெறாது விழித்திருத்தலின் இரவே பகல்போலாகும் நிலை; இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல், நிலவுவெளிப்பட வருந்தல் என்பன முதலிய அகப்பொருட்டுறைகளில் இத்தன்மை பேசப்படும்; பகல் கங்குலாதல் - நாயகனது சந்நிதியின்மையால் பொலிவும் ஒளியமிழந்து இருள்பொதிந்து நிற்றலும் பகலிற் செல்லும் மனவெழுச்சியின்றி யிருத்தலுமாம் - இரவுக்குரியவுணர்வு, நினைவு, அயர்வு முதலியன பகற்போதிலும், பகற்போதுக்குரிய விழிப்பு, காமவின்ப நீக்கம், புறம்போதல் முதலியன இராப்போதிலும் இவர்பால் நிகழ்தலின், "கங்குல் பகலாய்ப் பகல்கங்கு லாகிக் கழிய" என்றார்; நங்கை பாவையார் இருபெயரொட்டு; எழுவாய்; இது மேல்வரும் "இடைப்பட்டார்"(3469) என்பது கொண்டு முடியும்; தளர்வாராகிய அவ்வம்மையாருக்கு; வினையாலணையும் பெயர்; நான்கனுருபேற்று வந்தது: இவை ந.சிவப்பிரகாச தேசிகர் குறிப்பு.
கழியா நாளெல்லாம் - கழியாமை - "ஊழியா மொருகணந்தான்"(3422) என்ற கருத்துக் காண்க; கழியாத நாட்களிலெல்லாம். காதல்மீதூரப் புலர்வார் - மீக்கொண்டெழுந்த காதல் மிகுதியினால் புலர்வாராகி; புலர்தல் - மனம் வெதும்புதல்.
சிலநாள் போனதற்பின் - இவ்வாறு புலர்வாராய்ச் சில நாட்கள் சென்ற பின்பு.