பாடல் எண் :3468

செம்மை நெறிசேர் திருநாவ லூர ரொற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாமவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினாற் றரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
314

(இ-ள்) செம்மை....வார்த்தை - செம்மை நெறியென்னும் சிவநெறி சேரும் திருநாவலூராளியாகிய நம்பிகள் திருவொற்றியூரிற் சேர்ந்து பணைத்த தனங்களையுடையாராகிய சங்கிலியம்மையாரை விளக்கமிக்க மணஞ்செய்து கொண்ட உண்மையான செய்தியை; தாம்....உரைப்ப - செய்தியறிவதற்காகத் தாம் அவரிடத்து ஏவியனுப்பிய மக்கள் வந்து நிச்சயமாகக் கூற; தம்மை...தளர்வார் - தம்மையறியாதபடியே எழுந்த சினத்தினாலே தரிக்கலாற்றாத நெஞ்சினோடும் களர்வராகி;
(வி-ரை) செம்மை நெறி - சிவநெறி; தவநெறியினை வேண்டிப் பெற்று மேற்கொண்டொழுகிய நெறி.
கொம்மை - வட்டம்; அழகு; திரட்சி(பிங்); குலவுமணம் - விளக்கம் பொருந்திய மணம்; விளக்கமாவது உலகர் யாவருமறிய நிகழும் விதிமணம்; இதனைக் கற்பியல் என அகப்பொருள் நூல்கள் பேசுவன; இது களவியல் மணத்தினின்றும் வேறாகியது என்றறிவிக்கக் குலவு என்ற அடைமொழி தந்தோதினார்; "தக்க விதி மணத்தால்"(3395) என்றதும், இறைவர் ஆணையின்படி "திருத்தொண்டரெழிற்பதியோ ருடனீண்டிக், கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கல்லியாணம் செய்தளித்தார்"(3420) என்றதும் கருதுக. குலவும் - இறைவர் விதித்தபடி நிகழும்.
மெய்ம்மை வார்த்தை - உண்மைகளைக் கட்டுரைப்ப என்று கூட்டுக; முன்னர்ப் பிறர்பாற்கேட்டுப், பின்னர் அதன் உண்மையினை அறியச் சிலரை அனுப்பி அவர்கள் கண்டு வந்து அஃதுண்மையே என்று கூற என்ற அளவில் விரித்துக் கொள்க; காரைக்காலம்மையார் புராண நிகழ்ச்சிகள் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. (1756 - 1757); பிறர்பாற் கேட்டபொருளை அவ்வாறே நம்பிவிடாமல் தாம் சிலரை ஒற்று அனுப்பி உறுதிப்படுத்திக்கொண்டு மேல் தொழில் புரிதல் வேண்டுமென்பது உலகியல் நீதிநூல்; முன் உரைத்தவையும் பார்க்க.
மெய்ம்மை வார்த்தை - இத்துணையும் குறிக்க மெய்ம்மை என்றார். கட்டுரைத்தல் - உறுதியாகக் கூறுதல்.
தம்மை அறியா வெகுளி - தம்மையும் அறியாது பெண்ணியல்பால் வந்த சினம்; தாமே துணிந்து நினைந்து மேற்கொண்டதன்று என்பதாம். உம்மை தொக்கது; கற்புடை மடவார் கணவர்பாற் சினத்தலாகாது என்பது நீதியாகலின் வெகுளுதல் பொருந்தாது; ஆனால் இங்கு அவரையும் அறியாமலே சினம் போந்தது என்பதாம். தம்மையும் கோபத்தையும் வேறு பிரித்தற்கரிய கோபம் என்றும் கூறுவர்.
தரியாமையாவது - தமக்கே உரியதாகிய தம் நாயகரது இன்பம் பிறர்க்கு முரித்தாகக் கண்டு பொறுக்கலாற்றாமை.
தளர்தல் - தரியாமை காரணமாக உடல் தளர்ச்சியுறுதல்; இதன் தன்மையினை வரும் பாட்டிலுரைப்பார்.
கொம்மை முலை, மெய்ம்மை வார்த்தை, செம்மைநெறி - பண்புத்தொகை; விட்டார் - வினையாலணையும் பெயர்; அறியா - தரியா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் (ந.சிவ.தேசிகா குறிப்பு).