மென்பூஞ் சயனத் திடைத்துயிலு மேவார் விழித்து மினிதமரார்; பொன்பூந்தவிசின்மிசையினிரார்; நில்லார்;செல்லார்; பறம்பொழியார்; மன்பூ வாளி மழைகழியார்; மறவார்; நினையா ரென்செய்வார் என்பு டுருக்கும் புலவியோ பிரிவோ விரண்டி னிடைப்பட்டார். | 315 | (இ-ள்) மென்பூ....அமரார் - மெல்லிய மலர்கள் பரப்பிய சயனத்திலே தூங்குவதையும் விரும்பார்; (தூங்காவிடில் விழித்திருப்பாரோ எனின் அவ்வாறு) விழிப்புடனும் இனிதாகவிருத்தலையும் விரும்பமாட்டார்; பொன்பூந்தவிசின்.....புறம்பொழிவார் - சயனத்தின்மேவாராகிப் பொன் புனைந்த அழகிய ஆசனத்திருப்பரோ எனின் அதன்மேலும் இருக்கமாட்டார்; (ஆசனத்தின் இராராயின்) எழுந்து நிற்பரோ எனின் அதுவும்மாட்டார்; நடக்கவுமாட்டார்; நடந்து புறம்பு செல்லவுமாட்டார்; மன்...கழியார் - மன்மதனுடைய பூ அம்புகள் இடைவிடாது மழை போல வீழ்தலையும் விலக்கமாட்டார்; மறவார்...என்செய்வார் - நம்பிகளை மறக்கவும் மாட்டார்; (ஆயின் நினைப்பரோ எனின் செற்றத்தால்) நினைக்கவும் மாட்டார்; என்னதான் செய்வார்?; என்பூடு...இடைப்பட்டார் - எலும்பினையும் உள் உருக்கும் புலவியினிடத்தோ? அன்றிப் பிறவினிடத்தோ? என்றறியமாட்டாது இவ்விரண்டினிடையிற் பட்டனர். (வி-ரை) மென்பூ....அமரார் - உடல்தளரும் ஏனையோர் உலகியலில் படுக்கையிற் கிடப்பர்; உறங்குவர்; உறங்கியமையால் உடல் ஓய்வு பெறும்; பின்னர்த் தளர்வு நீங்கி வலுப்பெற்றெழுவர் என்பது உடல் பற்றிய மருந்து நூல் முடிபு; இங்குத் தளர்ச்சியுற்ற பாவையார் அவ்வாறு செய்ய லாற்றாதவராயினர் என்பது சயனத்திடைத் துயிலுமேவார் என்றதன் கருத்து; துயில்பெறாவிடினும் ஓய்வு பெற்றுச் சயனத்தின்மீது அமைதியாக இருப்பினும் ஒருவாறு உடற்றளர்ச்சி நீங்கும்; மனம் புலர்ந்து உள் வெதும்பியமையால் அவ்வாறு இனிதமர்தலும் ஆற்றாராயினர் என்பது. மேவுதல் - விரும்புதல்; "நம்பும் மேவு நசையா கும்மே" (தொல்.) பொன்பூ.....புறம்பொழியார் - சயனத்திடை இனிதமர்த லாற்றாதபோது பூந்தவிசில் இருக்கலாம்; அஃது இயலாதாயின் எழுந்து நிற்றல் அன்றி மாளிகையினுள்ளாற் சுற்றி வருதல், அன்றிப் புறத்தே சென்று மனமாறுதல் என்றிவற்றிலொன்று செய்யலாம்; இவையெவையும் செய்யவு மாற்றாராயினர் என்பது. மன் பூவாளி மழைகழியார் - முன் சொன்ன நிலைகளின் காரணம் கூறியவாறு; மன் - வெற்றியுடைய மதனனது; மதன் என்பதன் இடைக்குறை; பூவாளி - மலரம்புகள்; மழைகழியார் - மழைபோல அடர்ந்து பெய்யும் மதனம்புகளுக் குட்படாதபடி விலகமாட்டார். மறவார் நினையார் - மறவார் - இந்நிலைகளுக் கெல்லாம் காரணமாகிய அவரை மறந்துவிடலாமோ எனின் - மறக்கவும் இயலாதவராயினார்; புலத்தல் காரணமாக வேனும் அவரது நினைவு அகலாதாயிற்று; நினையார் - மறக்க இயலாவிடின் நினைவில் வைப்பாரோ எனின் புலர்தலின் நினைக்கவுமாட்டார் என்க. "நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்". என்செய்வார் - மென்பூ.......புறம்பொழியார் - என்றவை புறத் தொழில்கள்; மறவார் நினையார் - அகத்தொழில்; எனவே புறம் அகம் என்ற இரண்டாலும் எத்தொழிலும் செய்ய வியலாதபோது வேறென்னதான் செய்வார் என்றபடி. காரணம் பூவாளி மழைகழியாமையாம் என்று குறிக்க இடையில் வைத்தார்; என்செய்வார் - ஒன்றும் செய்ய இயலாமை என எதிர்மறை குறித்தது. கவிக்கூற்று. என்பூடு......இடைப்பட்டார் - புறம் அகம் என்ற இரண்டு கருவிகளாலும் எத்தொழிலும் செய்ய இயலாதபோது அவர் நிலைதானென்னை? எனின்; அஃதின்னதாமென்றறிவித்தபடி; புலவியோ அன்றிப் பிரிவோ என்ற இரண்டு நிலைகளின் இடையிலே பட்டு நின்றனர் என்பதாம். புலவி - ஊடலின் மிகுதி. இடைப்படுதலாவது புலவியுமாகாது பிரிவுமாகாது வருந்தும் நிலை; என்னை? கூடிய வழியன்றிப் புலவி நிகழாதாதலானும் இங்குக் கூட்டம் நிகழாமையானும் இது கைக்கிளையே யன்றிப் புலவியாகாது; மனத்தாற் பிரிதலில்லாமையானும் மன நினைவு இடையறாது நிகழ்தலின் உருவெளிப்பாடு முதலியவை உண்மையானும் பிரிவுமாகாது; பின்னை என்னையோ இவர் நிலை? எனின், இவையிரண்டினிடைப்பட்டதோர் தனித்த நிலை என்பதாம். என்பு ஊடு உருக்கும் புலவி - புலவியின் இயல்பு குறித்தது; எலும்பையும் உருக்கும் தன்மை வாய்ந்தது என்க; என்பூடுருக்கு மென்பதைப் பிரிவினுடனுங் கூட்டுக. இப்பாட்டுப் பிரிந்தார் மன நிலையினையும், வேறொரு பெண்ணை மணந்த நாயகனிலை கேட்ட நாயகியின் உள்ள நிலையினையும், இனிது விளங்க உரைக்கும் சதுரப்பாடுடைய மிக உயர்ந்த அகப்பொருட் சுவையுடையது; குறிக்கொள்க. மிசையிரார் - வன்பூவாளி - நினையார் - வாய் விள்ளார் - என்பனவும் பாடங்கள். |
|
|