ஆன கவலைக் கையறவா லழியு நாளி லாரூரர் கூன லிளவெண் பிறைக்கண்ணி முடியார் கோயின் முன்குறுகப் பானல் விழியார் மாளிகையிற் பண்டு செல்லும் பரிசினாற் போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறநின்றார். | 316 | (இ-ள்.) ஆன......நாளில் - முன் கூறியவாறு உளவாகிய கவலையுடன் கூடிய செயலறு நிலையினாலே மனமுடைந்து வருந்தும் நாளில்; ஆரூரர்.....குருக - நம்பியாரூரர் வளைந்த பிறைச் சந்திரனாகிய கண்ணி சூடிய முடியினை யுடைய இறைவரது திருப்பூங்கோயிலின் முன்பு சேர; பானல்.....பரிசனங்கள் - குவளைமலர் போன்ற கண்களையுடைய பரவையாரது திருமாளிகையில் முன்னெல்லாம் போகும் தன்மையினாற் சென்ற பெருமையுடைய பரிசனங்கள்; புகுத.....புறநின்றார் - மாளிகையின் உள்ளே செல்ல வாயில் பெறாமற் புறத்தே நின்றார்கள். (வி-ரை.) ஆன - முன் இரண்டு பாட்டிலும் கூறியவாற்றால் உளவாகிய; ஆக்கச் சொல் காரணங் குறித்தது. கவலைக் கையறவு கவலையுடன் கூடிய செயலற்ற நிலை; கையறவு - வருத்தம்; கவலை - பிரிவாற்றாமையினாலும், கையறவு - தம் நாயகர் வேறு ஒரு பெண்ணை மணந்து மனங் கொடுத்தார் என்றதனாலும் விளைந்தன. கையறுதல் - ஒரு செயலும் செய்யலாற்றாத நிலை. பெரும்பான்மை உயிர் போன்றதொன்றை இழந்த போது உள்ள நிலையினைக் குறிக்க வழங்கும் சொல். அழிதல் - மனமுடைந்து மெலிவு பெறுதல். கூனல்....பிறை - பரவையாரது மனமழிந்த நிலை போலவே உள்ளுடைந்து உடல் வளைந்த இளம்பிறை என்றது குறிப்பு. கண்ணி முடிமாலை; "கூனற்றிங்கண் குறுங்கண்ணி" (தேவா - பிள்). கோயில் முன் குறுக - நம்பிகள் திருக்கோயிலின் முன் அணையும்போது பரிசனங்கள் பரவையார் திருமாளிகைக்குச் சென்றனர்; நம்பிகள் கோயில் முன் குறுகியது திருவந்தயாம நேரம் என்பது முன் (3458) உரைக்கப்பட்டது. திருவாரூரினை மயங்கு மாலையிற் புகுந்த நம்பிகளுடன் போந்த பரிசனங்கள் திருவத்தயாமநேரம் வரை அவரது பணி மேலிட்டு உடனிருந்தனராதலாலும், திருவொற்றியூரின் நிகழ்ச்சிகளும் பிறவும் பரவையார் தெரிந்து கொண்டமையால் வரும் மாறுபாடுகளின் விளைவினை உட்கொண்டன ராதலாலும், ஊரெலாம் துஞ்சும்அந்நெடுநேரம் வரை தாழ்த்துச் சென்றனர் என்க; ஆயின் இதுபோழ்து சென்றமை நம்பிகள் செல்லுமுன் சென்று ஆவன அறிந்து செய்தற் பொருட்டு என்க. திருக்கோயில் வழிபாட்டில் பரிசனங்கள் உடனிருக்க வேண்டாமையும் காண்க. அங்கு அடியவர்களே உடனிருத்தற் குரியார் என்ற குறிப்பு முன் "திருத்தொண்டர் விரவுவாருடன் கூடி" (3458) என்றவிடத்துக் காட்டப்பட்டது. பண்டு செல்லும் பரிசு - முன் காலமெல்லாம் போகும் தன்மை. பானல் விழியார் - இரவில் மலரும் குவளையினைக் கூறியது பரவையார் "துயிலும் மேவா"ராய் (3469) நின்ற நிலைக் குறிப்புப் பெறுதற்கு. பெருமையாவது நம்பிகளது பணிவிடைகளைச் செய்யும் பெரும்பேறு வாய்க்கப்பெற்ற நிலை. "கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்" என்று அவ்வடிமைத்திறத்தின் பெருமையை ஆசிரியர் காட்டியருளியது காண்க. அவர்களது குணமைத்திறத்தின் பெருமையை ஆசிரியர் காட்டியருளியது காண்க. அவர்களதுகுண நிறைவுக் குறிப்புமாம். ஏனைய உலகியற் பரிசனங்கள் போன்றா ரல்லர் என்பது. புகுதப்பெறாது புறநின்றார் - இதன் காரணம் உணர்த்தற் கெழுந்தது வரும்பாட்டு; அந் நிகழ்ச்சிகளைப் பரிசனங்களின் வாக்கின் வைத்துக் கூறச்செய்தல் கவிநயம். |
|
|