மற்ற மாற்றங் கேட்டழிந்த மனத்த ராகி வன்றொண்டர் "உற்ற விதனுக் கினியென்னோ செயலென் றுணர்வா ருலகியல்பு கற்ற மாந்தர் சிலர்தம்மைக் காதற் பரவை யார்கொண்ட செற்ற நிலைமை யறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார். | 318 | (இ-ள்) மற்ற...மனத்தராகி - மற்ற மாற்றத்தினை அப் பரிசனங்கள்பாற் கேட்டு அழிந்த மனத்தினை உடையவராகி; வன்றொண்டர்....உணர்வார் - நம்பிகள் வந்துற்ற இந்நிலையினுக்குத் தீர்வாக "இனி என்னோ செய்யக் கடவது?" என்று உணர்ச்சியிற் றேர்வாராகித் தெளிந்து; உலகியல்பு....செலவிட்டார் - உலகியல் பினை நன்கறிந்து தகவியற்றும் நிலை கைவந்த சில மாந்தர்களைக் காதலையுடைய பரவையார் மேற்கொண்ட கோப நிலைமையின் தன்மையினை அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு அது தீரும் வகையினைச் சொல்லிச் சினந்தணிவிக்கும்படிச் செல்ல விடுத்தனர். (வி-ரை) மற்ற மாற்றங் கேட்டு - மற்று - தாம் எதிர் பார்த்ததற்குமாறாகிய; மாற்றம் - சொல், மனம் மாறுபட்ட நிலை, என்று இரட்டுற மொழிந்து கொள்ள வைத்த கவிநயம் கண்டு கொள்க. அழிந்த மனம் மனமழிதலாவது - மனமுடைந்து வருந்துதல். உற்ற எதிர்பாராது வந்து பொருந்திய; இதனுக்குச் செயல் - இந்நிலையினை மாற்றுதற்கு; உரிய செய்கை - உபாயம்; நான்கனுருபு பகைப்பொருளில் வந்தது; "பிணிக்கு மருந்து" என்புழிப் போல. உணர்வார் - செலவிட்டார் - என்று கூட்டி முடிக்க; உணர்வார் - உணர்வாராய்த் தெளிந்து. தெளிந்து என்பது குறிப்பெச்சம். உலகியல்பு கற்ற - உலகியல் அறிவும், அனுபவமும், வினை செயல் வகை முதலிய ஆற்றல்களும் உடைய; உலகியலில் எவ்வெந் நிலையில் யார் யார்க்கு எவ்வெவ்வகையில் எடுத்துக்கூறினால் செயல் முடியுமோ அவ்வவ்வகை கூறிச் செயலினை முடிக்கும் ஆற்றல்வகை எல்லாம் அடங்க உலகியல்பு கற்ற எனப்பட்டது; இவ்வாறாகிய செயல்களில் அனுபவ முதிர்ந்த என்க. செற்ற நிலைமை யறிந்து - பரிசனங்கள் கூறக் கேட்ட மட்டிலன்றி அவரது செற்றத்தின் அளவு முதலாகிய தன்மைகளை நேரே அறிந்து; செற்றம் - கோபம். "செற்றம்" (3526) (3474); தன் மட்டிலடங்குவதன்றி மேல் எழுந்து செலும் நிலையில் ஓங்கிய என்பது குறிப்பு. தணியாக் கோபமென்பர். தீர்வு - அது தணியும் வகைக்கு உள்ள மொழிகள். தீர்வுசெய்யும் மொழிகளைத் தீர்வென்றார். செலவிட்டார் - செல்லும்படி ஏவி விடுத்தனர். கேட்டொழிந்த - என்பதும் பாடம். |
|
|