பேத நிலைமை நீதியினாற் பின்னும் பலவுஞ் சொன்னவர்முன் மாத ரவரு மறுத்துமனங் கொண்ட செற்ற மாற்றாராய் "ஏத மருவு மவர் திறத்தி லிந்த மாற்ற மியம்பிலுயிர் போதலொழியா" தெனவுரைத்தா ரவரு மஞ்சிப் புறம்போந்தார். | 320 | (இ-ள்) பேத நிலைமை....சொன்னவர் முன் - முன்னர்ச் சாம உபாயம்பற்றிக் கூறியவர்கள், அதன் மேல் பேத நிலைமையினை மேற் கொண்டு அந்த நீதியின் உபாயம் பற்றி மேலும் பலவாற்றானும் செற்றம் தணியுமாறு எடுத்துச்சொன்ன அம்மாந்தர்களின் முன்பு; மாதர்...மாற்றாராய் - அந்த மாதர் பரவையம்மையாரும் அக் கூற்றுக்களை மறுத்துத் தாம் மேற்கொண்ட செற்றத்தினை மாற்றாதவராகி; ஏதம்......என உரைத்தார் - தீமை பொருந்திய அவர் (நம்பிகள்) திறம்பற்றி இந்த மாற்றங்களை மேலும் சொன்னீர்களானால் எனது உயிர் போகுதல் தவறாது என்று சொன்னார்; அவரும்....போந்தார் - அவர்களும் பயந்து புறம் போயினார்கள். (வி-ரை) பேதநிலைமை நீதியினால் முன்னர்க் கூறிய சாமோபாயம் பற்றிய உரைகளை, அவ்வுபாயம் விரும்பியபடி பயன்றராமையாலே, விடுத்து, அடுத்த உபாயமாகிய பேதம் என்னும் தன்மையினை உட்கொண்ட நீதிபற்றி; இவ்வுபாயம் பற்றிச் சொல்லும் முறைகளைப் பிள்ளைத்தமிழ் நூல்களுள் அம்புலிப் பருவப் பகுதியிற் பரக்கக் காணலாம்; பேத நிலைமை நீதியினால் - ஊடலுக்குரிய ஒழுக்கத்தினால் என்பர் இராமநாதச் செட்டியார். பின்னும் பலவும் -முன் சாமோபாயத்தாலுரைத்த பலவற்றின் மேலாக, இவ்வுபாயத்தைத் தொடர்ந்து மேலும் பலவாறாகிய மொழிகளையும். ஏதம் மருவும் அவர் - என்பாற் றீங்கு செய்தலின் குற்றமுடைய அந் நம்பிகள். உயிர் போதல் ஒழியாது - நான் உயிர் நீப்பது உறுதி என்றபடி; போதல் - தாம் வலிந்து போக்குதல் தற்கொலைப் பழியாமாதலின் அவ்வாறன்றி உயிர்தானே போய்விடுவது என்ற குறிப்பும் காண்க. புறம் - திருமாளிகையினை நீங்கிப் புறம்பு. |
|
|