போந்து புகுந்த படியெல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற் றயர்வார் துயர்வேலை நீந்துந் துணையாம் புணைகாணார் நிகழ்ந்த சிந்தா குலநெஞ்சிற் காந்த வழிந்து தோய்ந்தெழார் கங்கு லிடையா மக்கடலுள். | 321 | (இ-ள்) போந்து...விளம்புதலும் - (முன் கூறியபடி பரிசனங்கள்) போந்து நிகழ்ந்தபடி எல்லாவற்றையும் அழகிய குளிர்ந்த வயல்களை யுடைய திருமுனைப்பாடி நாட்டின் தலைவராகிய நம்பிகளுக்கு அறிவித்தலும்; வெருவுற்று அயர்வார் - (நம்பிகள்) அச்ச முற்று வருந்துவாராய்; துயர்வேலை...காணார் - துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுதற்குரிய துணையாகும் தோணிபோன்றாரைக் காணாமையின்; சிந்தாகுலம்...அழிந்து - நேர்ந்த மன வேதனை நெஞ்சத்தினைச் சுட மனமழிந்து; கங்குல் இடையாமக் கடலுள் - இராத்திரியின் நடுயாமமாகிய கடலுள்ளே; தோய்ந்து எழார் - முழுகி மேல் எழ மாட்டாராயினர். (வி-ரை) புகுந்தபடி - நிகழ்ந்தவாறே; எல்லாம் - எல்லாச் செய்கைகளையும். வெருவுற்று - எதிர்பாராது சடுதியில் நேரும் துன்பம் வெரு எனப்படும். துயர் வேலை நீந்தும் புணையாம் துணைகாணார் - துன்ப மிகுதியினைக் கடலாகவும், அதனைக் கடத்தற்குத் துணையாவாரைப் புணைஆகவும் உருவகித்தார்; காணார் - உலகியல்பு கற்ற மாந்தர் சொல்லியும் பயனில்லாமையால் மனிதருள்ளே துணை செய்வார் பிறரிலர் என்பார் காணார் என்றார். சிந்தா குலம் - சிந்தை ஆகுலம் என்பது ஒரு சொன்னீர்மைத்தாய் வந்தது. ஆகுலம் - துன்பம்; காந்துதல் - வெதுப்புதல்; சுடுதல். கங்குலிடை யாமக் கடலுள் தோய்ந்து எழார் - கங்குல் இடையாமம் - பாதியிரவு; நள்ளிரவு; அர்த்தயாமம் என்பது வடமொழி வழக்கு; கங்குல் இடையாமத்தைக் கடலாக உருவகித்தார் உலகுயிர்களை எல்லாம் தன்னுள் அகப்படுத்தி அவத்தை பேதங்களுட்படுத்தி யலைத்தலால்; மேல் வரும்பாட்டில்பிறங்கிருள்வாய் என்பதும் காண்க. தோய்தல் - அழுந்துதல். |
|
|