பாடல் எண் :3477

"முன்னை வினையா லிவ்வினைக்கு மூல மானாள் பாலணைய
என்னை யுடையாய்! நினைந்தருளா யிந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை யகற்றி லுய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செய"லென்று பெருமா னடிக டமைநினைந்தார்.
323

(இ-ள்) முன்னை...நினைந்தருளாய் - என்னை ஆளுடைய பெருமானே! முன்வினையின் பயனாக இவ்வினைக்குக் காரணமாகி நின்ற பரவையாரிடம் நான் சேர்வதற்கு நினைந்தருள் செய்யீர்!; இந்தயாமத்து...என்று - இந்த நடுயாமத்தில் தேவரீர் எழுந்தருளி அன்னம் போன்ற அவளது புலவியை நீக்கினால் உய்யலாமே யன்றி வேறு செயல் இல்லை என்று வேண்டி; பெருமான்...நினைந்தார் - இறைவரது திருப்பாதங்களை நினைந்தார்.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) முன்னை வினையா லிவ்வினைக்கு மூலமானாள் - முன்னை வினை - பண்டு திருமலையின் நிகழ்ச்சி; இவ்வினை - இங்கு நேர்ந்த இத்துன்ப நிலை வரையில் உள்ள நிகழ்ச்சிகளின் தொகுதி; வினையால் வினைக்கு மூலம் - முன்னை வினையின் விளைவாக வந்த இவ்வினை வருதற்குக் கருவி. மூலம் - வினை வெளிப்படுதற்குப் பயன்படும் கருவி. மூலமானாள் - பரவையார். பழைய வினையால் இப்பிறவியின் விளைவுக்கு மூலமாயி னாளுடைய பக்கத்தை யடையுமாறு.
அணைய நினைந்தருளாய் - இறைவர் செயலெல்லாம் நினைப்பு மாத்திரை அளவானே நிகழ்வனவாதல் குறிப்பு; "இச்சாமாத்திரம் பிரபோ சிருட்டி" "நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத் தேரானை" (தேவா).
எழுந்தருளிப் புலவியினை அகற்றில் - எழுந்தருளி என்றது அருள் புரிந்து என்ற மட்டில் பொருள் தந்து நின்றது; அகற்றுதல் - நீக்குதல்.
அகற்றில் உய்யலாம் அன்றிப் பிறிது செயல் இல்லை - உய்வதற்கு வேறுவழி இல்லை என்று உறுதிப்பொருள் தர உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் கூறினார்.
என்னை உடையாய் - என்னை உடைமைப் பொருளாய் ஆளாகக் கொண்டமையால் என்று வேண்டுதலுக்குக் காரணங் குறித்தவாறு; இக்கருத்தே பற்றி மேலும் உரைத்தல் காண்க; "நான் உமக்கு - அடியேனாகில் நீர் எனக்கு தம்பிரானாரேயாகில்" (3482); "வலிய ஆட்கொண்ட பற்றென்" (3509);
பெருமானடிகள் தமை - பெருமானது திருவடிகளை; பெருமானாகிய அடிகளை என்று ஒரு சொல்லாகக் கொண்டுரைத்தலுமாம்; "அவர் எம்பெருமா னடிகளே" (தேவா).
என்னை யுடையா னினைந்தருளில் - என்பதும் பாடம்.