அடியா ரிடுக்கண் டரியாதா ராண்டு கொண்ட தோழர்குறை முடியா திருக்க வல்லரே? முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத் தொடியார் தழும்பு முலைச்சுவடு முடையார் தொண்டர் தாங்காணும் படியா லணைந்தார் நெடியோனுங் காணா வடிகள் படிதோய. | 324 | (இ-ள்) அடியார்...வல்லரே? - அடியவர்களது துன்பங்களைத் தரிக்கலாற்றாத இறைவர் தமது அடியா ராதலோடு தம்மால் ஆளாகக் கொள்ளப்பட்ட தோழராகிய நம்பிகளது குறையினை முடிக்காமலிருக்க வல்லராவரோ?; முற்றும்...உடையார் - உலக முழுதும் ஈன்ற காமாட்சி யம்மையாரின் அழகிய தளிர்போலுங் கையிலணிந்த வளையின் தழும்பும் முலையின் சுவடும் உடைய இறைவர்; தொண்டர்....படிதோய் - விட்டுணுவும் காணாத திருவடிகள் நிலம் பொருந்தத் தொண்டராகிய நம்பிகள் காணும்படியால் வந்தணைந்தனர். (வி-ரை) அடியார்....வல்லரே - இது கவிக்கூற்று; ஏகாரம் வினா; வல்லரல்லர் என எதிர்மறை குறித்தது. தொண்டர்காண அணைந்ததற்குக் காரணங் கூறியவாறு; அன்புடையாரை அறிவன் சிவன் என்பது இறைவரியல்பாக ஞானசாத்திரங் கண்ட உண்மை; குறை - வேண்டும் காரியம். முற்றும் அளித்தாள் - உலக முழுதும் ஈன்றளித்த உமையம்மையார். கைத்தொடியார்...உடையார் - திருவேகம்பர் அம்மையாரது வளைத் தழும்பும் முலைச்சுவடும் அணிந்த வரலாறு; திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (1143) பார்க்க. விரிவு காஞ்சிப் புராணம் தழுவக்குழைந்த படலமும், பிறவும் பார்க்க. நெடியோனும் காணா அடிகள் படிதோய் தொண்டர் தாங்காணும்படியால் அணைந்தார் என்க; தொணடர்தம் பெருமை கூறியபடி; படிதோய - நிலம் பொருந்த. தொண்டர் - நம்பிகள்; அவர் கண்டவாறு வரும் பாட்டிற் காண்க. முற்றும்...உடையார் - இறைவரது கருணையின் எளிமை குறித்தது. |
|
|