பாடல் எண் :3479

தம்பி ரானா ரெழுந்தருளத் தாங்கற் கரிய மகிழ்ச்சியினாற்
கம்பி யாநின் றவயவங்கள் கலந்த புளக மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரருமெதிரே நளின மலர்க்கை தலைக்குவிய
அம்பி காவல் லவர்செய்ய வடித்தா மரையின் கீழவிழுந்தார்.
325

(இ-ள்) தம்பிரானார் எழுந்தருள - இறைவர் எழுந்தருளி வரக்கண்டு; தாங்கற்கரிய....முகிழ்ப்ப - தாங்குதற்கரிய பெருமகிழ்ச்சியினாலே உடலின் எல்லா அவயவங்களும் கம்பித்து, அதனோடு உடல் முழுதும் மயிர்ப்புளகம் முகிழ்ப்ப; நம்பியாரூரரும்....குவிய - நம்பியாரூரரும் இறைவர் திருமுன்பு தாமரை மலர் போன்ற கைகள் தலையின்மேல் ஏறிக்குவிய; அம்பிகா வல்லவர்...வீழ்ந்தார் - அம்மைபாகராகிய இறைவரது சிவந்த திருவடித் தாமரையின் கீழ்ப் பொருந்த நிலமுற விழுந்தனர்.
(வி-ரை) தம்பிரானார் - தம்மை ஆளாகக் கொண்ட தம் பெருமானடிகள் என்ற நிலையை நினைந்து வேண்டினாராதலின் தம்பிரானார் என்ற தன்மையாற் கூறினார்.
அவயவங்கள் கம்பியா நின்று - என்க; கம்பித்தல் - உடல் நடுக்கம் கொள்ளுதல்; "ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே, யாக வென்கை கண்கள் தாரை யாற தாக வையனே" (திருவா).
கலந்த மயிர்ப்புளகம் முகிழ்த்தல் - மயிர்க்கூச் செறிதல்.
அம்பிகா வல்லவர் - அம்பிகையின் நாயகர்; சிவபெருமான்; வல்லவர் என்பது வலவர் என்பதன் விரித்தல் விகாரமாகக் கொண்டு, அம்பிகைக்கு வலப்பக்கத்தினர் என்றுரைத்தலுமாம். பரவையார்பாற் றூது செல்ல நின்றாராதலின் அம்மை தொடர்பு பற்றிக் கூறினார்.