விழுந்து பரவி மிக்கபெரு விருப்பி னோடு மெதிர்போற்றி எழுந்த நண்பர் தமைநோக்கி "யென்னீ யுற்ற" தென்றருளத் தொழுந்தங் குறையை விளம்புவார் "யானேதொடங்குந் துரிசிடைப்பட் டழுந்து மென்னை இன்னமெடுத் தாள வேண்டு முமக்" கென்று, | 326 | (இ-ள்) விழுந்து....என்றருள - திருவடியில் வீழ்ந்து துதித்து மிகுந்த பெரிய விருப்பத்தினோடும் எதிரில் போற்றி எழுந்த தோழனாரை நோக்கி "நீ இயைந்த வருத்தம் யாது?" என்று (இறைவர்) கேட்டருள; தொழும்...விளம்புவார் - தொழுகின்ற தமது குறையினை எடுத்துச் சொல்லுவாராய் (நம்பிகள்); யானே...உமக்கென்று - "நானே தொடங்கிக் கொண்ட குற்றத்தி னுட்பட்டு வருந்துகின்ற என்னை அக்குற்றத்தினின்றும் இன்னமும் மேலெடுத்து ஆட்கொண்டருள வேண்டுவது உமக்குக் கடமை" என்று கூறி, (வி-ரை) நீ உற்றது என்? - என்க. உற்றது - உற்ற துன்பம்; வருத்தம் என்றது நம்பிகளின் உள்ளுணர்வு நிறைந்த பெருமானாதலின் அறிய நின்றது; ஆயின் மேல் வினவ நின்றதென்னை? எனின், உலக நிலையியலின் பொருட்டென்க: மேல்வரும் நிகழ்ச்சிகள் யாவும் இவ்வாறே உய்த்துணர்ந்து கொள்ளத்தக்கன. யானே தொடங்கும் துரிசிடைப்பட்டு அழுந்தும் என்னை - துரிசு - குற்றம்; யானே தொடங்கும் - நானே மேற்கொண்டு செய்துகொண்ட செயலின் பயனாக; சங்கிலியார்பாற் கொண்ட காதலும் செய்த சபதமும் அதனைத் தவறியதும் முதலியவற்றின் விளைவாக; இன்னம் - முன்னர் ஆட்கொண்டமைபோல மேலும்; "தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி" (நம்பி. தேவா). உமக்கு - உமக்குக் கடன்; கடமை என்பது இசை யெச்சம். (நம்பி) என்று (3480) - என மொழிந்து (3481) - என (3482) - விண்ணப்பம் செய்த நம்பி முகநோக்கித் - தம்பெருமான் - அருள் செய்தார் (3483) என்று இந்நான்கு பாட்டுக்களையும் கூட்டி முடிக்க. தொடக்குத்துரிசு - என்பதும் பாடம்.
|
|
|