பாடல் எண் :3481

"அடியே னங்குத் திருவொற்றி யூரி னீரே யருள்செய்ய
வடிவே லொண்கட் சங்கிலியை மணஞ்செய் தணைந்த திறமெல்லாங்
கொடியே ரிடையாள் பரவைதா னறிந்து ‘தன்பா லியான்குறுகின்
முடிவே’ னென்று துணிந்திருந்தா ளென்னான் செய்வ"தெனமொழிந்து,
327

(வி-ரை) அங்கு - திருவாரூரில் விண்ணப்பிக்கின்றாராதலின் அங்கு என்று சேய்மைச் சுட்டினாற் கூறி அங்குத் திருவொற்றியூரில் என்றார்; அங்கு அசை என்பாருமுண்டு.
நீரே அருள் செய்ய - இத்துன்பம் நீர் அருள் செய்ததன் காரணமாகத் தொடர்ந்து வந்ததாதலின் அதனைத் தீர்த்தல் உமது கடன் என்றது குறிப்பு.
மணஞ் செய்தணைந்த - மணத்தாற் சேர்ந்த; மணஞ் செய்து பின் இங்கு வந்தணைந்த என்றலுமாம்.
திறம் எல்லாம் - இடையிட்ட சரித நிகழ்ச்சிகள் எல்லாம்.
தான் அறிந்து - பிறர் கேட்டு அறிந்ததனோ டமையாது தாமே தக்காரை ஏவி அறிந்து என்க; ஏகாரம் தொக்கது; "மெய்ம்மை வார்த்தை தாமவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்ப" (3468); "ஒன்று மொழியா வகையறிந்து" (3471); தான் அசை என்பாருமுண்டு.
முடிவேன் - முடிதல் -உயிர் துறத்தல் (3474); "முடியே னினிப்பிறவேன்" (நம்பி. தேவா); கொடி - கொடிபோன்ற; ஏர் - அழகிய; உவமஉருபு தொக்கது; ஏர் - உவம உருபு என்றலுமாம்.
துணிந்திருந்தாள் - இருக்கின்றாள் என்பது துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டது என்பர் இராமலிங்க அடிகளார்.
கொடிநேரிடையாள் - என்னே செய்வது - என்பனவும் பாடங்கள்.