பாடல் எண் :3482

"நாய னீரே! நானுமக்கிங் கடியே னாகி னீரெனக்குத்
தாயி னல்ல தோழருமாந் தம்பி ரானா ரேயாகில்

ஆய வறிவு மிழந்தழிவே னயர்வு நோக்கி யவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரு"மென;
328

(இ-ள்) அடியேன்....திறமெல்லாம் அங்குத் திருவொற்றியூரிலே தேவரீரே அருள்புரிய, வடித்த வேல் போன்ற ஒள்ளிய கண்களையுடைய சங்கிலியாரை அடியேன் மணஞ் செய்து அணைந்த தன்மைகளை எல்லாம்; கொடியேர்.....துணிந்திருந்தாள் - கொடி போன்ற அழகிய இடையினையுடைய பரவையார் தானே அறிந்துகொண்டு தன்னிடம் நான் வந்தால் உயிர் விடுவேன் என்று துணிந்திருந்தாள்; என்.....மொழிந்து - ஆதலால் நான் செய்வது யாது என்று கூறி,
(வி-ரை) நாயனீரே! - தலைவரே!"; நாயன் - தலைவர். "அழகிது நாயனீரே" (774); "நாயனு மடிமையு நாட்டியதாகும்"; ஏகாரம் விளியுருபு.
இங்கு - இந்நிலையில்; இவ்விண்ணப்பம் பற்றிய நிகழ்ச்சியில்; இங்கு அசையென்பாருமுண்டு.
அடியேனாகில் - தம்பிரானாரேயாகில் - அடியேன் என்பதும் பிரானார் என்பதும் திண்ணமே யானால் - உண்மையேயானால்;
தாயின் நல்ல - தாயினும் நல்ல; உயர்வு சிறப்பும்மை தொக்கது.
தோழருமாம் தம்பிரானாரேயாகில் - தான் அடியேனாகில் என்பதனாலே அவர் பிரானாராவது உடன் பெறப்படும்; ஆதலின் தம்பிரானாரேயாகில் என்பது வேண்டாது கூறினார் என்னில், அற்றன்று; அடியேன் என்ற நிலையினை நீரே வலிய அமைவுபடுத்தி ஏற்றுக் கொண்டீர் என்ற குறிப்புப் பெறக் கூறினார் என்க; தோழருமாம் - தலைவராதல் மட்டிலன்றித் தோழருமாகிய என உம்மை இறந்தது தழுவியது. ஏகாரம் - தேற்றம்.
அடியேன் - என்றும், தோழருமாம்பிரானார் - என்றும் இரண்டு காரணம் கூறியது அவர்பால் தாம் இவ்வாறு விண்ணப்பித்தற்கும் அவர் இணங்கி யியற்றுதற்கும் உள்ள உரிமையும் அமைதியும் குறிப்பதற்கு;
தோழருமாம் - என்றது "பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால், ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே" (பாங்கற் கூட்டம் - பாங்கனை நினைதல் - 11 - திருக்கோவை) என்பதாதி அகப் பொருட்டுறைகளின் குறிப்புப்பட நின்றது.
தாயினு நல்ல - "தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்" (பிள்-தேவா - திருக்கோணமலை - 51); "தாயவ னுலகுக்கு" (பிள்-தேவா - திருவல்லம்-2); "தாயுமா யெனக்கே" (அரசுகள் - திருச்சிராப்பள்ளி - 4) "தாயினு நல்ல சங்கரனுக் கன்பர்" (அரசுகள் - ஆதிபுராணக் குறுந் - 9) என்பன முதலியவை காண்க; இத்திருவாக்குக்களிற் காண்கின்றவாறு.
"தாயினு நல்ல" - என்ற அடைமொழியைத் "தம்பிரானா"ரோடு சேர்த்தாது "தோழர்" என்பதனோடு புணர்த்திய தென்னையோ? எனின், குழவிக்கு வேண்டிய எத்தொழிலும் செய்யும் தாயின் தன்மை தோழனாந் தகுதியோடே பொருந்துவதாகும் குறிப்புப்பட என்க.
ஆய அறிவும் இழந்து - உம்மை இறந்தது தழுவியதென்று கொண்டு, செயற்கை யறிவே யன்றி இயற்கை வறிவும் இழந்து என்பர் இராமலிங்க அடிகள்;
அவ்வளவும் - மாளிகையின் சிறு தூரத்தின் அளவும் என்றலின் உம்மை சிறப்பும்மை; அந்த மாளிகையின்கண்ணும் என்ற ஏழனுருபு விரித்துரைத்தலுமாம்; இப்பொருளில் உம்மை இழிவு சிறப்பு.
இவ்விரவே - ஏகாரம் பிரிநிலை; துன்ப மிகுதிக் குறிப்பு உணர்த்திற்று.
தீர்த்தாண்டருளும் - என்பதும் பாடம்.