பாடல் எண் :3483

அன்பு வேண்டுந் தம்பெருமா னடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பஞ் செய்த நம்பி முகநோக்கித்
"துன்ப மொழிநீ யாமுனக்கோர் தூத னாகி யிப்பொழுதே
பொன்செய் மணிப்பூண பரவைபாற் போகின றோ"மென்றருள்செய்தார்.
329

(இ-ள்) அன்பு.....வேண்டி - அன்பு ஒன்றினையே விரும்பிய தமது ஆன்ம நாயகர் தம் அடியாராகிய நம்பிகள் யாது விரும்பினாரோ அதனையே தாமும் அருள விரும்பினாராகி; முன்பு...நோக்கி - தமது திருமுன்பு நின்று விண்ணப்பஞ் செய்த நம்பிகளது முகத்தினை நோக்கி; துன்பம்ஒழிநீ.......அருள் செய்தார் - நீ உன் துன்பத்தினை நீக்கக் கடவாய்; நாம் உனக்காக ஓர்தூதனாகி இப்பொழுதே பொன்னாலும் மணியாலும் புனைந்த அணிகளைப் பூண்ட பரவையிடம் செல்கின்றோம் என்று அருளிச் செய்தனர்.
(வி-ரை) அன்பு வேண்டும் தம்பெருமான் - "வேண்டுதல் வேண்டாமை யிலா" னாகிய இறைவர் தமது அருள் சுரத்தற்கு அடியார்பால் வேண்டுவது அன்பு ஒன்றுமே யாம் என்பது; அன்பு - அன்பே; பிரிநிலை ஏகாரம் தொக்கது;
அடியார் வேண்டிற்றே வேண்டி - அடியார் வேண்டுமதனையே தாமும் திருவுள்ளங் கொண்டு; "வேண்டத் தக்க தறிவோய்"....."வேண்டி நீயா தருள் செய்தாயானு மதுவே வேண்டினல்லால்" (திருவா); அடியார் வேண்டுவன முற்றுப்பெறும் அளவாவன அவற்றையே இறைவன் திருவுள்ளத்துக் கொள்ளும் நிலையளவேயாம். இறைவரது திருவருள் வழியே அடியார் வேண்டுவதும் பொருந்தினால் அவ்வளவே அவ்வேண்டுகை நிறைவேறும் அளவென்பது திருவாசகம். ஆனால் இங்கு அந்த முறையும் நிலையும் மாறி, அடியார் வேண்டுகையினை நிறைவேற்றத் திருவுளங்கொண்டு இறைவர் அதனையே தாமும் வேண்டினார் என்றார்; அடியாரது அடிமைத்திறத்தின் உறைப்பும், இறைவர் அவர் எண்ண முடிப்பதிற் கொண்டருளிய ஆர்வமும் குறித்தற்கு.
உனக்கு ஓர் தூதனாகிப் போகின்றோம் - என்க. உனக்கு - உன் பொருட்டு; தூதன் - தூதுகாணும் அகப் பொருட்டுறைகளின் கருத்தினை இங்கு வைத்துக் காண்க.
இப்பொழுதே - முன் "இவ்விரவே" (3482) என்றதற்கிணங்க, அதனினும் விரைந்து இப்பொழுதே - என்றார்; அது போழ்து பின்னிரவாய்க் கழிந்து செல்லும் கால எல்லையும் குறிப்பு.