எல்லை யில்லாக் களிப்பினரா யிறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து வல்ல பரிசெல் லாந்துதித்து வாழ்ந்து நின்ற வன்றொண்டர் "முல்லை முகைவெண் ணகைப்பரவை முகில்சேர்மாடத்திடைச்செல்ல நில்லா தீண்ட வெழுந்தருளி நீக்கும் புலவி" யெனத்தொழுதார். | 330 | (இ-ள்) எல்லையில்லா...வன்றொண்டர் - அளவில்லாத மகிழ்ச்சியை உடையவராகி இறைவரது திருவடிகளில் விழுந்து எழுந்து இயன்ற தன்மைகள் எல்லாவற்றாலும் துதித்து வாழ்வடைந்து நின்றவராகிய வன்றொண்டர்; முல்லை.....எனத் தொழுதார் - முல்லை யரும்பு போன்ற வெள்ளிய பற்களை யுடைய பரவையினது மேகந் தவழ உயர்ந்த மாளிகையின் கண்ணே சென்றருளுவதற்காக இனி இங்கு நில்லாது விரைவில் எழுந்தருளிச் சென்று அவளது புலவியினை நீக்குவீராக என்று சொல்லித் தொழுதனர். (வி-ரை) எல்லையில்லாக் களிப்பினராய் - இறையவரே தூது செல்ல ஒருப்பட்டருளினாராதலின் "முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ" (132) என்றபடி அச்செய்தி முற்றுப் பெற்றேவிடும் என்ற உறுதிப்பாட்டினால் தம் கருத்து முற்றியதாகவே கொண்டு அளவில்லா மகிழ்ச்சியினுட்பட்டனர். தாளில்...நின்ற - அளவுகடந்தெழுந்த மகிழ்ச்சியின் மெய்ப்பாடுகள்; வல்ல பரிசெலாம் - தாம்வல்ல - தம்மாலியன்ற - ஆற்றாலெல்லாம். நகை - நகைக்கு இருப்பிடமான பல்வரிசை குறித்தது. முகில்சேர் மாடம் - உயர்ச்சி குறித்தது. வெண்ணகைப் பரவை - என்றது இறைவர் தூதுவரக்காணும் பரவை புலவி நீங்கி மகிழ் கொள்ளுதல் ஒருதலை என்ற குறிப்பினாற் கூறியது. "அணிமுறுவல் அரும்பரவை" (294). ஈண்ட - விரைவாக; நீக்கும் புலவி -என மாறிக் கூறியதும் விரைவுக் குறிப்பு. |
|
|