அண்டர் வாழக் கருணையினா லால கால மமுதாக உண்ட நீலக் கோலமிடற் றொருவ ரிருவர்க் கறிவரியார் வண்டு வாழு மலர்க்கூந்தற் பரவை யார்மா ளிகைநோக்கித் தொண்ட னார்தந் துயர்நீக்கத் தூத னாரா யெழுந்தருள, | 331 | (இ-ள்) அண்டர்...அறிவரியார் - தேவர்கள் வாழும் பொருட்டு அருளினாலே ஆலால விடத்தினையே அமுதாக உண்டு அதனால் நீலகண்டராகிய ஒருவரும், இருவராகிய பிரம விட்டுணுக்களுக்கு அறிதற் கரியவரும் ஆகிய இறைவர்; வண்டு...நோக்கி - வண்டுகள் மொய்த்துள்ள மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரது திருமாளிகையை நோக்கி; தொண்டனார்தம்...எழுந்தருள - தொண்டனாராகிய நம்பிகளது தூதராக எழுந்தருளிச் செல்ல, (வி-ரை) ஆலகாலம் - ஆலால விடம், உண்ட நீலக் கோல மீடறு - விடம் உண்டதனால் அது தங்கி நீலமான கழுத்து; மேலும் "கடல் விளைத்த ஆலம் இருண்ட கண்டத்தான்" (3488) என்பது காண்க. கொடியதாகிய விடத்தினை அமுதாக உண்டு கண்டத் தடக்கியது போலவே பரவையார்பாற் றூதாகிய, தாழ்வாக உலகர் கொள்ளும் இச்செயலினையும் பரமனார் மேற்கொண்டருளினர் என்ற குறிப்புப் பட இத்தன்மையாற் கூறினார். இச்செயலினைப் பற்றியே இப்புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமனார் வெகுண்டமையும், நம்பிகளும் பிழை யுடன்பட்டு (3541) மேற்சரிதம் விளைந்தமையும் இங்குக் கருதத்தக்கன. கோலமீடறு - கோலமாவது உயிர்களை உய்விக்கு அழகு; உண்ட - உண்ணுதலாலாகிய. ஒருவர் இருவர்க் கறிவரியார் - எண் பற்றிய சொல்லணி. நொக்கி - குறிக்கொண்டு. தூதனாராய் - "உனக்கோர் தூதனாகி" (3483) என்ற இறைவர் கூற்றுக் காண்க; ஆய் - ஆக்கச்சொல் தாமே அவ்வாறு தம்மை ஆக்கிக்கொண்டு என்ற பொருளில் வந்தது. தொண்டனார்தம் துயர் நீக்க -தொண்டராதலின் அவரது துயர் நீக்கும் கடப்பாடுடைமைபற்றி எனக் காரணக் குறிப்புப்பட நின்றது; அண்டர் வேண்ட ஆலமுண்டவர் தொண்டர் வேண்டத் தூதராய் வரமாட்டாரோ? என்ற நயம் பற்றி வந்ததும் காண்க. |
|
|